Green tea vs Coffee: கிரீன் டீயா? காபியா? எது சிறந்ததுனு தெரியாம குடிக்காதீங்க! இதயத்திற்கு ஆபத்து வரும்...
Green tea vs Coffee: கிரீன் டீ, காபி இவை இரண்டில் எந்த பானம் இதயத்திற்கு சிறந்தது என்பதை குறித்த ஆய்வு முடிவுகளை இங்கு காணலாம்.
உலகில் அதிக மக்களால் விரும்பப்படும் பானங்களில் டீயும், காபியும் அடங்கும். இன்றைய காலக்கட்டத்தில் உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியம் பேணவும் பலர் கிரீன் டீ அருந்துகின்றனர். காபியில் உள்ள காபின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் தன்மை உடையதால் அதனையும் பலர் அருந்துகின்றனர். இதில் எதை தேர்வு செய்வது என்பது பலருக்கும் சவாலாக உள்ளது. இந்த குழப்பத்தை சில ஆய்வு முடிவுகள் மூலமாக ஆராய்ச்சியாளர்கள் தீர்த்து வைத்துள்ளனர். கிரீன் டீ அல்லது காபி எதை அருந்தலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.
உலக சுகாதார அமைப்பு (WHO) மதிப்பீட்டின்படி, இந்தியாவில் 220 மில்லியன் நபர்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. இதற்கு வாழ்க்கை முறையும், உணவு பழக்கமும் தான் காரணம். இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் காபி அல்லது கிரீன் டீ சிறந்ததா என அடிக்கடி விவாதம் எழுகிறது. சமீபத்திய ஆராய்ச்சி இக்கேள்வி மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது.
சுமார் 12 ஆண்டுகளாக 18 ஆயிரம் பேரிடம் காபி மற்றும் கிரீன் டீயை அருந்துவது, அவர்களின் இரத்த அழுத்தம், இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதித்தது என்பதை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஜேஏசிசி (புற்றுநோய் அபாயத்தை மதிப்பிடுவதற்கான ஜப்பான் கூட்டு ஆய்வு) மேற்கொண்ட இந்த ஆய்வு குறித்து அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (JAHA) இதழில் வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: குழந்தைக்கு பொல்லாத கண் திருஷ்டி படாமல் இருக்க கட்டாயம் கண்மை வைக்கணுமா? உண்மை பின்னணி என்ன?
காபியில் 95 முதல் 200 மில்லிகிராம் வரை காஃபின் உள்ளது. கிரீன் டீயில் 35 மில்லிகிராம் மட்டுமே உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பார்த்தால் ஒரு கோப்பை கிரீன் டீயை விட காபியில் கிட்டத்தட்ட 3 மடங்கு காஃபின் உள்ளது. இது உடல் நலத்திற்கு நன்மை அல்ல. ஆய்வின்படி, காபியை விட கிரீன் டீ தான் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
காபி அருந்துவது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு கிரீன் டீ தான் ஏற்ற பானமாகும். கடுமையான உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி மட்டுமே அருந்தும்போது இறப்பு அபாயத்துடன் தொடர்புள்ளதை குறித்து ஆய்வு விளக்குகிறது. உயர் ரத்த அழுத்தம் இதய நோயை உண்டாக்கலாம். அதனால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரீன் டீ எடுத்து கொள்வதே சிறந்தது.
இதையும் படிங்க: Papaya aval kesari: உடலுக்கு சக்தி தரும் ருசியான 'பப்பாளி அவல் கேசரி' ஈஸியா எப்படி செய்வது?