- Home
- உடல்நலம்
- Eyelash Dandruff : கண் இமைகளில் உருவாகும் பொடுகு.. அலட்சியம் வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்
Eyelash Dandruff : கண் இமைகளில் உருவாகும் பொடுகு.. அலட்சியம் வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்
கண் இமைகளில் உருவாகும் பொடுகு குறித்து அலட்சியம் காட்டக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Blepharitis - Eyelash Dandruff
கண் இமைகளில் பொடுகு உருவாவது என்பது ஒரு பொதுவான நிலையாகும். இது மருத்துவ ரீதியாக பிளெஃபாரிடிஸ் (Blepharitis) என்று அழைக்கப்படுகிறது. இது கண் இமைகளின் விளிம்புகளில் ஏற்படும் ஒருவகை அலர்ஜியாகும். இது தொற்றுநோய் அல்ல. ஸ்டெஃபிலோகோகஸ் போன்ற பாக்டீரியாக்கள் அல்லது பூஞ்சைகள் கண் இமைகளில் தொற்றுகளை ஏற்படுத்தி இந்த பொடுகுகளை உருவாக்கலாம். கண் இமைகளில் உள்ள மீபோமியன் போன்ற சிறிய எண்ணெய் சுரப்பிகள் அடைபடும் பொழுது, அது சரியாக இயங்க முடியாமல் கண் இமைகளில் எண்ணெய் படிதலையும் பொடுகையும் ஏற்படுத்தும். கண்கள் வறட்சி அடையும் பொழுது கண் இமைகளில் பொடுகு ஏற்படலாம்.
கண் இமைகளில் பொடுகு ஏற்படுவதற்கான காரணிகள்
பொதுவாக தலை மற்றும் புருவங்களில் காணப்படும் பொடுகானது கண் இமைகளுக்கும் பரவலாம். முகத்தில் சிவப்பை ஏற்படுத்தும் ஒரு தோல் நோயான ரோசாசியா இருப்பவர்களுக்கும் கண் இமைகளில் பொடுகு ஏற்படும் வாய்ப்பு அதிகம். சில கண் மருந்துகள், கான்டாக்ட் லென்ஸ் வைப்பதற்கு முன் கண்களில் இடப்படும் கரைசல்கள், கண்களில் போடப்படும் மேக்கப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி கூட கண் இமைகளில் உருவாகும் பொடுகுக்கு காரணமாக அமையலாம். கண் இமைகளில் வாழும் சில வகை பூச்சிகள் அல்லது பேன்கள் பொடுகை ஏற்படுத்தலாம். கண் இமைகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது, முகத்திற்கு போடும் மேக்கப் பை சரிவர சுத்தம் செய்யாமல் இருப்பது ஆகியவையும் இமைகளில் பொடுகை ஏற்படுத்தும் காரணிகளாகும்.
கண் இமை பொடுகு இருப்பதற்கான அறிகுறிகள்
கண் இமைகளின் அடிப்பகுதி மற்றும் இமைகளில் வெள்ளை அல்லது மஞ்சள் நிற செதில்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். கண்கள் சிவந்து எரிச்சலுடன் அரிப்பு ஏற்படும். இது பெரும்பாலும் காலையில் அதிகமாக இருக்கும். கண்ணில் ஏதாவது ஒரு பொருள் சிக்கிக் கொண்டது போன்ற உறுத்தல் மற்றும் உணர்வு இருக்கும். வழக்கத்தை விட அதிகமாக கண்ணீர் வடியும். வெளிச்சத்தை பார்க்கும் பொழுது கண் கூசுதல், காலையில் கண் இமைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருத்தல், கண் இமைகள் உதிர்வு அல்லது இமைகளின் முடிகள் தவறான திசையில் வளர்தல், கண் இமைகளில் ஏற்படும் வீக்கம், சில சமயம் பார்வை மங்கலாக தோன்றுதல் ஆகியவை கண் இமைகளில் பொடுகு இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். இது ஒரு பொதுவான நிலையாக என்றாலும், நிரந்தர தீர்வு கிடையாது. சரியான கவனிப்பு மற்றும் சிகிச்சை மூலமாக இதை நிர்வகிக்க முடியுமே தவிர நிரந்தரமாக தீர்க்க முடியாது.
கண் இமை பொடுகை சுத்தம் செய்யும் முறை
கண் இமைகளை சுத்தம் செய்வது ஒரு முக்கியமான சிகிச்சை முறையாகும். ஒரு சுத்தமான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து அதிகப்படியான நீரைப் பிழிந்து கை பொறுக்கும் வண்ணம் சூடு வந்த பின்னர், கண்களை மூடிக்கொண்டு கண் இமைகளில் மசாஜ் செய்ய வேண்டும். இதை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை செய்யலாம். இது அடைபட்ட எண்ணெய் சுரப்பிகளை தளர்த்துவது மட்டுமல்லாமல், செதில்களை மென்மையாக்கவும் உதவும். ஒத்தடம் கொடுத்த பிறகு குளிர்ந்த நீரில் கண்களை கழுவ வேண்டும். பின்னர் காட்டன் துணி அல்லது பஞ்சு கொண்டு கண் இமைகளின் விளிம்புகளை மெதுவாக துடைக்க வேண்டும். இதனால் கண்களில் ஒட்டி இருக்கும் செதில்கள் மற்றும் மெல்லிய பொடுகுகள் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டு விடும். பின்னர் கண்களை குளிர்ந்த நீர் கொண்டு கழுவுதல் அவசியம்.
கண் பொடுகால் ஏற்படும் கடுமையான பின்விளைவுகள்
கண்களில் ஏற்படும் பொடுகானது சில பின் விளைவுகளையும் ஏற்படுத்தலாம். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் கண்களில் பெரும் தொற்றுக்கள் ஏற்படக்கூடும். இந்த பொடுகில் இருந்து வரும் செதில்கள் கண்ணீர் உற்பத்தியை குறைத்து வறண்ட கண்களை ஏற்படுத்தலாம். தொடர்ச்சியான எரிச்சல் மெட்ராஸ் ஐ அல்லது கண் கட்டி போன்ற நிலைகளுக்கு வழிவகுக்கும். நோயின் பாதிப்பு தீவிரமாகும் சமயத்தில், சில அரிதான சந்தர்ப்பங்களில் நீண்ட கால அலர்ஜி அல்லது கண் கருவிழி சேதம் ஆகியவை ஏற்பட்டு கண் பார்வையும் பாதிக்கலாம். கண்களில் மேற்கூறப்பட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் கடுமையான சிக்கல்களை தவிர்ப்பதற்கு ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டியது அவசியம். நோயின் பாதிப்பு தீவிரமடைந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
கண் பொடுகுக்கான மருத்துவ சிகிச்சைகள் என்ன?
பாக்டீரியா தொற்று இருந்தால் ஆண்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் களிம்புகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். கண் இமைகளின் வீக்கத்தை குறைக்க சரியான களிம்புகளை பயன்படுத்த வேண்டும். இமை பூச்சிகள் காரணமாக பொடுகு ஏற்பட்டால் டீ ட்ரீ ஆயில் கொண்ட கண் இமை கிளன்சர்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். நோயின் பாதிப்பு தீவிரமடைந்தால் வாய் வழியாக ஆண்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படும். கண் இமைகளில் பொடுகுகள் வராமல் இருக்க உங்கள் கண் இமைகளை தினசரி சுத்தம் செய்ய வேண்டும். படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் மேக்கப்பை முழுவதுமாக நீக்கிவிட வேண்டும். கண்களை தொடுவதற்கு முன்னர் கைகளை நன்கு கழுவ வேண்டும். துண்டுகள் மற்றும் பிற மேக்கப் பொருட்களை பிறருடன் பகிர்வதை தவிர்க்க வேண்டும். பழைய மேக்கப் பொருட்களை அவ்வப்போது மாற்றுவது முக்கியம்.
குறிப்பு: கண்களில் அலர்ஜி ஏற்படுத்தும் கண் மருந்துகள், அழகு சாதன பொருட்கள் ஆகியவற்றை தவிர்த்து விட வேண்டும். உலர்வான கண்கள் இருந்தால் அதற்குரிய சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளலாம். கண் இமைகளில் பொடுகுக்கான அறிகுறிகள் நீண்ட நாட்களாக இருந்தால் அல்லது மோசம் அடைந்தால் உடனடியாக கண் மருத்துவமனை அணுகி காரணத்தை கண்டறிந்து, உரிய சிகிச்சையைத் தொடங்க வேண்டும். சிகிச்சை தாமதமாகும் பொழுது கண் பார்வைகளிலும் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.