- Home
- உடல்நலம்
- உணவு
- Muttai paniyaram kuzhambu: கறி குழம்புக்கு டஃப் கொடுக்கும் ரெசிபி; முட்டை சாப்பிடாத உங்க பசங்க இதை விரும்பி சாப்பிடுவாங்க!
Muttai paniyaram kuzhambu: கறி குழம்புக்கு டஃப் கொடுக்கும் ரெசிபி; முட்டை சாப்பிடாத உங்க பசங்க இதை விரும்பி சாப்பிடுவாங்க!
Muttai paniyaram kuzhambu: முட்டை சாப்பிட்டாலே பிடிக்கவில்லை என்று சொல்லும் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு முறை இந்த மாதிரி குழம்பு செய்து கொடுங்க. கொஞ்சம் கூட முட்டை வாசனை வராமல் கறிக்குழம்பு மாதிரி இருக்கும்.

முட்டை பணியாரம் குழம்பு
வழக்கமான முட்டை குழம்பு அல்லது ஆம்லெட் சாப்பிட்டு சலித்துப் போனவர்களுக்கு, இந்த முட்டை பணியார குழம்பு ஒரு சிறந்த மாற்று உணவாகும். அசைவ உணவான கறி குழம்பிற்கு இணையான மணமும் சுவையும் கொண்ட இந்த குழம்பு, குறிப்பாக முட்டை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளைக் கூட விரும்பி சாப்பிட வைக்கும். பணியாரக் கல்லில் மென்மையாக ஊற்றி எடுக்கப்படும் முட்டைப் பணியாரங்கள், காரசாரமான தேங்காய் மசாலா குழம்பில் ஊறி மிகுந்த சுவையுடன் இருக்கும். மதிய உணவுடன் சூடான சாதம், சப்பாத்தி அல்லது இட்லி, தோசைக்கு இது அருமையான சைட் டிஷ் ஆக இருக்கும்.
தேவையான பொருட்கள்
மசாலா அரைப்பதற்கு:
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1 சிறிய துண்டு
கிராம்பு – 4
பொடியாக நறுக்கிய தேங்காய் – 1/4 கப்
பெரிய வெங்காயம் – 1
பெரிய தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
முட்டை பணியாரம் செய்வதற்கு:
முட்டை – 4
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1/2
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை
உப்பு – 1/4 டீஸ்பூன்
எண்ணெய்
குழம்பு தாளிப்பதற்கு:
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1/2
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
தனி மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
உப்பு
படி 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, நறுக்கிய தேங்காய், ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு நன்கு விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
படி 2
ஒரு பாத்திரத்தில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் அரை பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து சூடானதும், குழிகளில் சிறிது எண்ணெய் விட்டு, முட்டைக் கலவையை ஊற்றவும். இருபுறமும் பொன்னிறமாக வேகவைத்து திருப்பிப் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
படி 3
ஒரு வாணலியில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, நறுக்கிய அரை பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், மல்லித்தூள், தனி மிளகாய்த் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகக் கிளறவும்.
படி 4
மசாலா பொடிகளுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, இரண்டு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும். இறுதியாக, தயார் செய்து வைத்துள்ள முட்டைப் பணியாரங்களைக் குழம்பில் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான முட்டை பணியார குழம்பு தயார்.











