- Home
- உடல்நலம்
- உணவு
- Healthy egg seembal: கிராமங்களில் மட்டும் கிடைக்கும் என நினைக்கிறீங்களா? இனி உங்க வீட்டு பிள்ளைகளுக்கும் முட்டையில் சீம்பால் செஞ்சுக் கொடுங்க!
Healthy egg seembal: கிராமங்களில் மட்டும் கிடைக்கும் என நினைக்கிறீங்களா? இனி உங்க வீட்டு பிள்ளைகளுக்கும் முட்டையில் சீம்பால் செஞ்சுக் கொடுங்க!
Healthy egg seembal: சீம்பால் சாப்பிட ஆசையாக இருக்கும் நேரத்தில் எல்லாம் இந்த மாதிரி முட்டையில் செய்து சாப்பிட்டு பாருங்க. அசல் சீம்பால் சுவையில் இருக்கும்.

முட்டை சீம்பால்
கிராமப்புறங்களில் மட்டுமே எளிதாகக் கிடைக்கக்கூடிய பாரம்பரிய இனிப்பு வகைகளில் சீம்பாலுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அதன் மென்மையான தன்மையும், வாயில் வைத்தவுடன் கரையும் சுவையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரக்கூடியது. ஆனால், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு அசல் சீம்பால் கிடைப்பது மிகவும் அரிது. அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், நம் வீட்டு சமையலறையில் எப்போதும் இருக்கும் முட்டை மற்றும் பால் ஆகிய எளிய பொருட்களைக் கொண்டே, அசல் சீம்பால் சுவையில் ஆரோக்கியமான முட்டை சீம்பால் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முட்டை: 3
சர்க்கரை
காய்ச்சி ஆறவைத்த கெட்டியான பால்: 1 கப்
வெண்ணிலா எசென்ஸ்: 1 டீஸ்பூன் (அல்லது வாசனைக்கு ஏலக்காய்த்தூள்)
உப்பு: 2 சிட்டிகை
நெய்
படி 1
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி, விஸ்க் அல்லது கரண்டி கொண்டு நன்றாக அடித்து கலக்கவும். நன்கு கலக்கிய முட்டையுடன் 1 டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ் அல்லது முட்டை வாசனை பிடிக்காதவர்கள் இதற்குப் பதிலாக ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம் மற்றும் அரை கப் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை முழுமையாகக் கரையும் வரை விடாமல் நன்கு கலக்க வேண்டும். பிறகு, இனிப்பைத் தூக்கிக் காட்ட 2 சிட்டிகை உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்கவும்.
படி 2
சர்க்கரை நன்கு கரைந்ததும், தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி ஆறவைத்த 1 கப் கெட்டியான பாலை இதில் ஊற்றி, எல்லாம் ஒன்றாகச் சேரும்படி நன்கு கலக்கி தனியாக வைக்கவும். சீம்பால் வேகவைக்கப் போகும் கிண்ணம் அல்லது பாத்திரத்தின் உட்பகுதி முழுவதும் நெய் தடவவும். இப்போது தயார் செய்து வைத்துள்ள முட்டை-பால் கலவையை அந்தக் கிண்ணத்தில் ஊற்றவும். கிண்ணத்தின் மேற்பகுதியை அலுமினியம் ஃபாயில் கொண்டு காற்று புகாதவாறு இறுக்கமாக மூடவும். ஃபாயில் இல்லையென்றால், கிண்ணத்திற்குச் சரியாகப் பொருந்தும் தட்டைக் கொண்டு மூடலாம்; உள்ளே தண்ணீர் இறங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
படி 3
ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும், உள்ளே ஒரு சிறிய ஸ்டாண்ட் அல்லது தட்டு வைத்து, அதன் மேல் நாம் தயார் செய்து வைத்துள்ள முட்டை கலவை கிண்ணத்தை வைக்கவும். பாத்திரத்தை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவிடவும்.
படி 4
40 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, கிண்ணத்தை வெளியே எடுத்து முழுமையாக ஆறவிடவும். நன்கு ஆறிய பிறகு மேலே உள்ள ஃபாயிலை அகற்றி, ஃபிரிட்ஜில் சுமார் 1 மணி நேரம் வைத்து எடுத்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். பின்னர் ஒரு கத்தி அல்லது ஸ்பேட்டூலா கொண்டு ஓரங்களை மெதுவாக எடுத்துவிட்டு, ஒரு தட்டில் கவிழ்த்துப் பரிமாறவும்.













