- Home
- உடல்நலம்
- உணவு
- Groundnut Katli: 2 கப் வேர்க்கடலை இருந்தா போதும்... காஜு கட்லி தோத்துடும் சுவையில் அசத்தலான நிலக்கடலை கட்லி!
Groundnut Katli: 2 கப் வேர்க்கடலை இருந்தா போதும்... காஜு கட்லி தோத்துடும் சுவையில் அசத்தலான நிலக்கடலை கட்லி!
Groundnut Katli: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த காஜு கட்லிக்கு மாற்றாக, குறைந்த செலவில் நாவில் கரையும் சுவையான 'வேர்க்கடலை கட்லி' செய்யும் முறை பற்றி பார்ப்போம்.

தீபாவளி ஸ்பெஷல்: வேர்க்கடலை கட்லி
தீபாவளிப் பண்டிகை என்றாலே புத்தாடைகள், பட்டாசுகளுடன் நாவில் எச்சில் ஊறவைக்கும் பலகாரங்களும் நம் நினைவுக்கு வரும். இந்த ஆண்டு தீபாவளிக்கு வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான மற்றும் அசத்தலான ஒரு இனிப்பைச் செய்து கொடுக்க விரும்பினால், கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் காஜு கட்லியைப் போன்றே நிலக்கடலையை வைத்து வீட்டிலே வேர்க்கடலை கட்லி செய்யலாம்.
காஜு கட்லியை காஜு பர்ஃபி என்றும் அழைப்பார்கள். கெட்டியான பர்ஃபி போலல்லாமல், கட்லி என்பது மெல்லியதாக இருக்க வேண்டும். கட்லி என்ற சொல்லுக்கு மெல்லிய துண்டுகள் என்பது பொருளாகும். முந்திரியில் செய்வதை விட வேர்க்கடலையில் இந்த கட்லியைச் செய்வது மிகவும் எளிதானது; அத்துடன் அலாதியான சுவையையும் தரும். இந்த வேர்க்கடலை கட்லியைப் பக்குவமாகச் செய்வதற்கான முழுமையான செய்முறை விளக்கம் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை (நிலக்கடலை) 2 கப்
பால் பவுடர் 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் 3
சர்க்கரை 1 கப்
தண்ணீர் ½ கப்
நெய் 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம் - 1
வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும் வேர்க்கடலையைச் சேர்த்து, நிறம் மாறாமல் மிதமான தீயில் தோல் தனியாகப் பிரிந்து வரும் வரை வறுக்க வேண்டும். வறுத்த கடலையை ஒரு அகலமான தட்டில் கொட்டி ஆறவிடவும். நன்கு ஆறியதும் கைகளால் தேய்த்துத் தோலை நீக்கி, முறத்தில் புடைத்தோ அல்லது கைகளால் பிரித்தோ சுத்தமான பருப்புகளை மட்டும் தனியாக எடுக்கவும். ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து 'பல்ஸ்' (Pulse) முறையில் விட்டு விட்டு அரைக்க வேண்டும். தொடர்ந்து அரைத்தால் கடலையிலிருந்து எண்ணெய் பிரிந்து பசை போல மாறிவிடும் (விருப்பப்பட்டால் உரலில் இடித்தும் பொடி செய்யலாம்). அரைத்த வேர்க்கடலைப் பொடியைச் சல்லடையில் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நைசாகச் சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் சிறிதளவு சர்க்கரையுடன் 3 ஏலக்காய்களைச் சேர்த்துப் பொடியாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் பால் பவுடர், அரைத்து வைத்துள்ள சர்க்கரை-ஏலக்காய் பொடி ஆகியவற்றைச் சல்லடையில் சேர்த்து நன்றாகச் சலித்து எடுக்கவும். இந்த மாவை அரைத்த வேர்க்கடலைப் பொடியுடன் சேர்த்து ஒன்றோடொன்று கலக்கும்படி நன்கு கலந்து வைக்கவும் (பால் பவுடர் கட்லிக்கு நல்ல மென்மையான பதத்தையும், ஏலக்காய் நல்ல வாசனையையும் கொடுக்கும்). அடிகனமான வாணலி அல்லது பாத்திரத்தில் 1 கப் சர்க்கரையைச் சேர்த்து, அது மூழ்கும் அளவிற்குச் சுமார் ½ கப் தண்ணீர் ஊற்றவும். சர்க்கரை கரைந்து, பாகு கொதித்து 'ஒரு கம்பி பதம்' வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
செய்முறை விளக்கம் - 2
கம்பி பதம் வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு, தயாரித்து வைத்துள்ள வேர்க்கடலைப் பொடிக் கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும். கலவை அனைத்தும் ஒன்றாகத் திரண்டு பேஸ்ட் பதம் வரும் வரை கைவிடாமல் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கலவை சுருண்டு வரும்போது 1 டீஸ்பூன் நெய் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும். மென்மையான பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் உடனடியாக அடுப்பை அணைத்துவிட வேண்டும் (அதிக நேரம் அடுப்பில் வைத்தால் கலவை கடினமாகிவிடும்).
பின்னர் நெய் தடவிய பட்டர் பேப்பரில் இந்தக் கலவையை ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை கிளறி, பட்டர் பேப்பரை மடித்து அதன் மேலேயே அழுத்தி மென்மையாக்கவும். மாவு நன்கு மென்மையானதும் கைகளால் மென்மையாகப் பிசைந்து, சப்பாத்திக் கட்டையால் சமமான அளவில் சற்று தடிமனாகத் தேய்த்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் அதன் மேலே சில்வர் ஃபாயில் (வெள்ளித் தகடு) ஒட்டிக் கொள்ளலாம். பின்னர் கத்தியால் டைமண்ட் வடிவிலோ அல்லது விருப்பமான வடிவத்திலோ வெட்டி எடுத்தால், நாவில் கரையும் சுவையான ‘வேர்க்கடலை கட்லி’ தயார்! இந்த வேர்க்கடலை கட்லியை காற்றுப்புகாத டப்பா அல்லது பாட்டிலில் அடைத்து வைத்தால் ஒரு மாதம் வரை கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.













