- Home
- உடல்நலம்
- உணவு
- Rasmalai : தீபாவளிக்கு வீட்டிலேயே ரசமலாய் செய்வது எப்படி? வாயில் வைத்ததும் கரையும் இந்த ஸ்வீட் ரெசிபி!
Rasmalai : தீபாவளிக்கு வீட்டிலேயே ரசமலாய் செய்வது எப்படி? வாயில் வைத்ததும் கரையும் இந்த ஸ்வீட் ரெசிபி!
Rasmalai : தீபாவளிக்கு வீட்டிலேயே ருசியான ரசமலாய் செய்து பாருங்கள். மென்மையான பன்னீர் உருண்டைகள், குங்குமப்பூ வாசனை கொண்ட கெட்டியான பால் என அசத்தும் இந்த ஸ்வீட்டை எளிய முறையில் செய்வது எப்படி? தேவையான பொருட்கள், செய்முறை மற்றும் டிப்ஸ் இதோ

ரசமலாய்
தீபாவளிக்கு வீட்டிலேயே ஒரு ஸ்பெஷல் ஸ்வீட் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசையா? அப்படியானால், இந்த ரஸ்மலாயை ஒருமுறை செய்து பாருங்கள். இதைச் செஞ்சு சாப்பிட்டா அப்பப்பா எப்படி இருக்கும் தெரியுமா? வாயில் வைத்ததுமே மென்மையாகக் கரையும் பன்னீர் உருண்டைகள், அதனுடன் கலந்து வரும் குங்குமப்பூ வாசனை கொண்ட இனிப்பான பால் நினைத்தாலே நாவில் எச்சில் ஊறுமே.
கடைகளில் வாங்கும் ரசமலாயை விட வீட்டிலேயே சுத்தமாகவும், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இனிப்பைக் குறைத்தும் அதிகரித்தும் செய்யலாம். இந்த தீபாவளிக்கு உறவினர்களுக்கும் விருந்தினர்களுக்கும் செய்து கொடுத்து அசத்துங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் இந்த ரசமலாயை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ரசமலாய் செய்ய தேவையான பொருட்கள்
- பால் - 2 லிட்டர்
- எலுமிச்சைச் சாறு - 2-3 டேபிள்ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
- சர்க்கரை - 1 கப்
- ஏலக்காய் - 2
- குங்குமப்பூ - சிறிதளவு
- ஏலக்காய்த்தூள் - 1\4 டீஸ்பூன்
- பாதாம் - 10
- பிஸ்தா - 10
ரஸ்மலாய் செய்வது எப்படி? - படி 1
பன்னீர் தயாரித்தல்
- ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
- பால் கொதித்ததும் எலுமிச்சைச் சாற்றை சிறிது சிறிதாகச் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.
- பால் திரிந்து, பன்னீர் மற்றும் தண்ணீர் தனித்தனியாகப் பிரிந்ததும் ஒரு மெல்லிய துணியில் வடிகட்டவும்.
- பன்னீரில் உள்ள எலுமிச்சை வாசனை நீங்க குளிர்ந்த தண்ணீரில் ஒருமுறை அலசவும்.
- துணியில் கட்டி அதிகப்படியான தண்ணீரை வடிக்கவும்.
படி 2
பன்னீர் உருண்டைகள் செய்வது
- வடித்த பன்னீரை ஒரு தட்டில் போட்டு 8- 10 நிமிடங்கள் கையால் நன்றாகப் பிசையவும்.
- பன்னீர் மென்மையான மாவு போல மாறியதும் சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
- உருண்டைகளை மெதுவாக அழுத்தி தட்டையான வடிவில் செய்து கொள்ளவும்.
- உருண்டைகளில் விரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வேகும்போது உடையாமல் இருக்கும்.
படி 3
சர்க்கரைப் பாகில் வேகவைத்தல்
- ஒரு அகலமான பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் மற்றும் 1 கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- சர்க்கரை கரைந்து நன்றாகக் கொதித்ததும் பன்னீர் உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போடவும்.
- பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 12-15 நிமிடங்கள் வேகவைக்கவும்.
- உருண்டைகள் இருமடங்காகப் பெரிதாகி மென்மையாக மாறும்.
- அடுப்பை அணைத்து, உருண்டைகளை சர்க்கரைப் பாகிலேயே சிறிது நேரம் வைக்கவும்.
படி 4
ரசமலாய் பால் தயாரித்தல்
- மற்றொரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
- பால் கொதித்ததும் அடுப்பைக் குறைத்து, பால் பாதியாகக் குறையும் வரை கிளறிக் கொண்டே காய்ச்சவும்.
- குங்குமப்பூவை 2 டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் ஊறவைத்து சேர்க்கவும்.
- சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவைச் சேர்க்கவும்.
- மேலும் 2-3 நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.
படி 5
ரசமலாய் தயார்
- சர்க்கரைப் பாகில் உள்ள பன்னீர் உருண்டைகளை எடுத்து, கைகளால் அல்லது கரண்டியால் மெதுவாக அழுத்தி அதிகப்படியான பாகை நீக்கவும்.
- தயாரித்த குங்குமப்பூப் பாலில் உருண்டைகளைப் போடவும்.
- உருண்டைகள் பாலை நன்றாக உறிஞ்சும் வகையில் மெதுவாகக் கிளறவும்.
- அறை வெப்பநிலைக்கு வந்ததும் ஃப்ரிட்ஜில் 3-4 மணி நேரம் குளிர வைக்கவும்.
- மேலே நறுக்கிய பாதாம், பிஸ்தா தூவி பரிமாறவும்.
- அவ்வளவுதான் சுவையான, மென்மையான வீட்டில் செய்த ரசமலாய் தயார்.
ரசமலாய் சுவையாக வர சில முக்கிய டிப்ஸ்
முழுக் கொழுப்புள்ள பால்: நல்ல மென்மையான பன்னீர் உருண்டைகள் கிடைக்க உதவும்.
பன்னீரை நன்றாகப் பிசையவும்: உருண்டைகளில் விரிசல் ஏற்படாமல் இருக்க இது முக்கியம்.
அதிகமாக வேகவைக்க வேண்டாம்: அதிக நேரம் வேகவைத்தால் உருண்டைகள் கடினமாகலாம்.
பாலை நன்றாகக் காய்ச்சவும்: பால் சற்று கெட்டியாக இருந்தால் ரஸ்மலாய் சுவை அதிகரிக்கும்.
நன்றாகக் குளிர வைத்து பரிமாறவும்: குளிர்ந்த ரஸ்மலாய் இன்னும் சுவையாக இருக்கும்.
தீபாவளிக்கு எப்போது செய்து வைக்கலாம்?
ரசமலாயை தீபாவளிக்கு முந்தைய நாள் செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால், பன்னீர் உருண்டைகள் பாலின் சுவையை நன்றாக உறிஞ்சி இன்னும் ருசியாக இருக்கும். சுத்தமான, மூடிய பாத்திரத்தில் ஃப்ரிட்ஜில் வைத்து 2 -3 நாட்களுக்குள் சாப்பிடுவது நல்லது.
இந்த தீபாவளிக்கு கடையில் வாங்கும் ஸ்வீட்டுக்கு பதிலாக, வீட்டிலேயே செய்து பாருங்கள் இந்த குளுகுளு ரசமலாயை குங்குமப்பூ வாசனையும், பன்னீர் உருண்டைகளின் மென்மையும் சேர்ந்து பண்டிகையை இன்னும் இனிமையாக்கும்.





