- Home
- உடல்நலம்
- உணவு
- பெருங்காயத்தில் கலப்படம்.. 2 பிரபல பிராண்ட்களுக்கு அதிரடி தடை.. போலியை கண்டறிவது எப்படி?
பெருங்காயத்தில் கலப்படம்.. 2 பிரபல பிராண்ட்களுக்கு அதிரடி தடை.. போலியை கண்டறிவது எப்படி?
Asafoetida: நமது வீட்டு சமையலை மணக்க வைக்கும் பெருங்காயத்தில் கலப்படம் கண்டறியப்பட்டு அவற்றை விற்பனை செய்த 2 பிரபலமான பிராண்ட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போலியை எப்படி கண்டறிவது? என இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 பிரபல நிறுவனங்களின் பெருங்காயத்துக்கு தடை
நமது வீட்டு தவிர்க்க முடியாத மசாலாப் பொருளான பெருங்காயத்தில், தரம் மற்றும் கலப்படப் புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் மற்றும் எல்.ஜி. கோதூ & கம்பெனி ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்களின் பெருங்காய விற்பனைக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு குறித்த தகவலை FSSAI தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் பெருங்காய மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டபோது, அவை தரமற்றவை என்றும், தவறான லேபிள்களுடன் விற்பனை செய்யப்படுவதாகவும் கண்டறியப்பட்டது. சிலவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மாவுச்சத்து கலந்திருப்பதும், சிலவற்றில் இருக்க வேண்டிய முக்கிய சத்துக்கள் முற்றிலுமாக இல்லாததும் ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
எவரெஸ்ட் பெருங்காயத்தில் என்ன சிக்கல்?
எவரெஸ்ட் நிறுவனத்தின் 'கலவைப் பெருங்காயத் தூள்' மாதிரிகளை ஆய்வு செய்தபோது, அவை தரமற்றவை என உறுதி செய்யப்பட்டது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிமுறைகள், 2011-இன்படி, பெருங்காயத்தில் 'ஆல்கஹாலில் கரையக்கூடிய சாறு' குறைந்தபட்சம் 5% இருக்க வேண்டும். ஆனால், பரிசோதிக்கப்பட்ட ஒரு மாதிரியில் இதன் அளவு 0% ஆக இருந்ததுதான் இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம்.
இதேபோல், அந்நிறுவனத்தின் மஞ்சள் மற்றும் கருப்பு நிற பெருங்காயத் தூள் வகைகளிலும் இந்தச் சாற்றின் அளவு முறையே 3.29% மற்றும் 4.4% என அனுமதி செய்யப்பட்ட அளவை விடக் குறைவாகவே இருந்துள்ளது. இதையடுத்து, இந்தத் தரமற்ற நடைமுறையைச் சரிசெய்வதற்கான செயல் திட்டத்தை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு எவரெஸ்ட் நிறுவனத்திற்கு FSSAI உத்தரவிட்டுள்ளது.
எல்.ஜி. கோதூ நிறுவனம் மீதான குற்றச்சாட்டு என்ன?
இதேபோன்ற சோதனையில், எல்.ஜி. கோதூ & கம்பெனியின் பெருங்காயத் தூள் மற்றும் கட்டி வடிவ பெருங்காயம் ஆகிய இரண்டும் தரமற்றவை என்றும், கலப்படம் செய்யப்பட்டவை என்றும் கண்டறியப்பட்டது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான மாவுச்சத்து இருப்பது முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது.
விதிமுறைகளின்படி, பெருங்காயத்தில் மாவுச்சத்தின் அளவு 1 சதவீதத்தைத் தாண்டக்கூடாது. ஆனால், இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் இந்த அளவு மீறப்பட்டிருந்தது. மேலும், பெருங்காயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் தரமற்றவையாக இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2006-ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தரமான பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தவறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இரு நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலி பெருங்காயத்தை எப்படி கண்டறிவது?
போலி பெருங்காயம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், வீட்டிலேயே சில எளிய பரிசோதனைகள் மூலம் பெருங்காயம் ஒரிஜினலா? இல்லை போலியா? என கண்டறியலாம்.
நீரில் கரைத்தல்: ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு பெருங்காயத் தூளைப் போட்டுக் கலக்கவும். தூய்மையான பெருங்காயம் நீரில் முழுமையாகக் கரைந்து, பால் போன்ற வெள்ளை நிறமாக மாறும். கலப்படம் செய்யப்பட்ட பெருங்காயம் என்றால் அடியில் மாவுச்சத்து அல்லது தூசிகள் வண்டலாகத் தங்கும்.
மணமும் சுவையும்: அசல் பெருங்காயத்திற்கு மிகவும் காரமான சுவையும், தூரத்திலிருந்தே கண்டறியக்கூடிய நெடியுள்ள கடுமையான மணமும் இருக்கும். போலி பெருங்காயத்தில் இந்த இயற்கையான வாசனை இருக்காது அல்லது மிகக் குறைவாகவே இருக்கும்.
அடர்ந்த நிறம்: சுத்தமான பெருங்காயம் பொதுவாக அடர் பழுப்பு சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். மிகவும் வெளிறிய நிறத்திலோ அல்லது செயற்கையான நிறத்திலோ இருந்தால் அதில் கலப்படம் இருக்க வாய்ப்புள்ளது.

