நாடு முழுவதும் பால் மற்றும் பால் பொருட்களில் நடக்கும் கலப்படத்தைத் தடுக்க FSSAI சிறப்பு அமலாக்கப் பணியைத் தொடங்க உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக பன்னீர் மற்றும் கோவா கலப்படத்தைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பால் மற்றும் பால் பொருட்கள் கலப்படத்தைத் தடுக்க சிறப்பு அமலாக்கப் பணியை உடனடியாகத் தொடங்கும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக பன்னீர் (Paneer) மற்றும் கோவா (Khoya) ஆகியவற்றில் நடக்கும் கலப்படம் மற்றும் தவறான பிராண்டிங் (misbranding) ஆகியவை குறித்து ஆய்வு நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்படும் பால் பொருட்கள் குறித்து பல புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான நடவடிக்கை கட்டாயம்

"இந்த நடவடிக்கையின் கீழ், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உரிமம் பெற்ற மற்றும் உரிமம் இல்லாத பால் பொருட்கள் தயாரிப்பு அலகுகளில் தீவிர ஆய்வுகளை மேற்கொள்வார்கள், மாதிரிகளைச் சேகரிப்பார்கள், உணவு வணிக ஆபரேட்டர்களின் பதிவுகளைச் சரிபார்ப்பார்கள், கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அதற்கான ஆதாரங்களையும் கண்டுபிடிப்பார்கள்," என்று FSSAI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உரிமத்தை ரத்து செய்தல், பறிமுதல் செய்தல், தயாரிப்புகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் சட்டவிரோத செயல்படும் கடைகளை மூடுவது உட்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு

மேலும், உணவுப் பாதுகாப்பு அமைப்பில் (FOSCOS) உடனுக்குடன் அறிக்கை சமர்ப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் விரிவான அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலப்படம் செய்யப்பட்ட பால் பொருட்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் FSSAI கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த உத்தரவு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் பிரிவு 16(5)-ன் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. இது நுகர்வோரைப் பாதுகாக்கவும், உணவுப் பாதுகாப்புத் தரங்களைப் பேணவும் நோக்கமாகக் கொண்டது என்றும் FSSAI வட்டாரங்கள் தெரிவித்தன.

பண்டிகைக் காலங்களில் கண்காணிப்பு

சமீபத்தில், பண்டிகைக் காலமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பால் பொருட்களின் நுகர்வு அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, கலப்படத்தைக் கட்டுப்படுத்தவும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் FSSAI ஒரு சிறப்பு கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.