- Home
- உடல்நலம்
- உணவு
- Chettinad Onion Rasam : வீடே மணக்கும் செட்டிநாடு வெங்காய ரசம்.. ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்து அசத்தலாம்!
Chettinad Onion Rasam : வீடே மணக்கும் செட்டிநாடு வெங்காய ரசம்.. ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்து அசத்தலாம்!
Onion Rasam : தினமும் ஒரே மாதிரியான ரசம் சாப்பிட்டு அலுத்துவிட்டதா? சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், புளி, துவரம் பருப்பு சேர்த்து மணமணக்கும் செட்டிநாடு வெங்காய ரசம் செய்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வீடே மணக்கும் செட்டிநாடு வெங்காய ரசம்
வீட்டில் என்னதான் விதவிதமான குழம்பு, கூட்டு, பொரியல் எனச் செய்து சாப்பிட்டாலும், கடைசியாக ஒரு கப் சூடான ரசம் இருந்தால் அந்தச் சாப்பாட்டின் ருசியே தனிதான்.
ஆனால், தினமும் தக்காளி ரசம், மிளகு ரசம் என ஒரே மாதிரியான ரசத்தையே செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாகவும், அதேசமயம் காரசாரமான சுவையுடனும் இருக்கும் வெங்காய ரசத்தை ஒருமுறை செய்து பாருங்கள்.
அதிலும் செட்டிநாடு சமையலுக்கே உரிய மசாலா மணத்துடன், சின்ன வெங்காயத்தின் இனிப்புச் சுவையும், மிளகு, சீரகத்தின் காரமும் கலந்து தயாராகும் வெங்காய ரசத்தைச் சுவைத்துப் பார்த்தால் இன்னும் கொஞ்சம் சாதம் கேட்கத் தோன்றும்.
குறிப்பாக சாப்பாடு ராமன் போன்ற உணவுப் பிரியர்களுக்குப் பிடித்தமான பாரம்பரிய உணவு வகைகளில் செட்டிநாடு வெங்காய ரசத்திற்கும் தனி இடம் உண்டு. சாதத்தில் ஊற்றிப் பிசைந்து சாப்பிடுவதற்கும், சூடான ரசத்தை அப்படியே பருகுவதற்கும் ஏற்ற இந்த ரசம், எளிமையான பொருள்களைக் கொண்டே அசத்தலான சுவையில் தயாராகிவிடும்.
அப்படிப்பட்ட செட்டிநாடு வெங்காய ரசத்தை நம் வீட்டிலேயே மணக்க மணக்க எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.
செட்டிநாடு வெங்காய ரசம் செய்யத் தேவையான பொருள்கள்
- சின்ன வெங்காயம் - 10 முதல் 15
- மிளகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி விதை அல்லது தூள் - சிறிதளவு
- பச்சை மிளகாய் - 1
- தக்காளி- 1
- புளி - சிறிய எலுமிச்சை அளவு
- துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1\4 டீஸ்பூன்
- கடுகு - தேவையான அளவு
- உளுத்தம் பருப்பு - தேவையான அளவு
- சீரகம் - சிறிதளவு
- வரமிளகாய் - 1
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி - தழை சிறிதளவு
- பெருங்காயத்தூள் - 1\4 டீஸ்பூன்
- வெல்லம் - சிறிய துண்டு
- எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
- உப்பு - தேவைக்கேற்ப
செட்டிநாடு வெங்காய ரசம் செய்முறை - படி 1
புளிக்கரைசல் தயார் செய்தல்
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் புளியைப் போட்டு, அதில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் புளியை நன்றாகக் கரைத்து வடிகட்டி புளிக்கரைசலைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அதேபோல் துவரம்பருப்பையும் ஊறவைத்து வேகவைத்து மசித்து எடுத்துக்கொள்ளவும்.
படி 2
ரசத்திற்கான மசாலா பொடி தயாரித்தல்:
அடுத்ததாக ஒரு உரலில் மிளகு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும். அதனுடன் கொத்தமல்லி விதைகள் அல்லது கொத்தமல்லித் தூள், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து லேசாக இடித்துக் கொள்ளவும். இந்த மசாலா கலவையைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
படி 3
புளிக்கரைசலைக் கொதிக்க வைத்தல்
இப்போது ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, உப்பு, சிறிதளவு கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். இவற்றை கைகளால் நன்றாகப் பிசைந்து கொள்ளவும். பின்னர் இதில் ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றவும்.
அதனுடன் 5 கப் தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைக்கவும். தக்காளி நன்றாக வெந்து, புளியின் பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
படி 4
பருப்பு மற்றும் மசாலா சேர்த்தல்
புளிக்கரைசல் நன்றாகக் கொதித்ததும், ஏற்கெனவே வேகவைத்து மசித்த துவரம் பருப்பைச் சேர்க்கவும். தொடர்ந்து உரலில் இடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் கலவையையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
படி 5
ரசத்தில் தாளிப்பைக் கொட்டுதல்:
வதக்கிய வெங்காயக் கலவையை ஏற்கெனவே கொதித்துக் கொண்டிருக்கும் ரசத்தில் கொட்டவும். இதனால் சின்ன வெங்காயத்தின் மணமும், தாளிப்பின் சுவையும் ரசத்தில் நன்றாக இறங்கும்.
சின்ன வெங்காயத்தைத் தாளித்தல்
இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.
பின்னர் இடித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். அதனுடன் பெருங்காயத்தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வறுபட வேண்டிய அவசியமில்லை.
படி 6
ரசத்தில் தாளிப்பைக் கொட்டுதல்
வதக்கிய வெங்காயக் கலவையை ஏற்கெனவே கொதித்துக் கொண்டிருக்கும் ரசத்தில் கொட்டவும். இதனால் சின்ன வெங்காயத்தின் மணமும், தாளிப்பின் சுவையும் ரசத்தில் நன்றாக இறங்கும்.
படி 7
இறுதியாக வெல்லம் சேர்த்தல்
இறுதியாக ரசத்தில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரைந்து ரசம் லேசாக நுரைக்கத் தொடங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்.
ரசத்தை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது. அப்போதுதான் மிளகு, சீரகம், வெங்காயம் ஆகியவற்றின் இயல்பான மணமும் சுவையும் நன்றாக இருக்கும்.
படி 8
மணமணக்கும் செட்டிநாடு வெங்காய ரசம் ரெடி
அவ்வளவுதான்! சுவையான செட்டிநாடு வெங்காய ரசம் தயார். இதனைச் சூடான சாதத்தில் ஊற்றி, மேலே சிறிதளவு நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். குறிப்பாக அப்பளம், உருளைக்கிழங்கு வறுவல், வாழைக்காய் வறுவல் போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிடும்போது இன்னும் அருமையாக இருக்கும்.
செட்டிநாடு வெங்காய ரசம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை
- சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் அரைக்காமல் உரலில் இடித்துச் சேர்த்தால் அதன் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.
- மிளகு, சீரகத்தைப் பொடியாக அரைக்காமல் சற்று கொரகொரப்பாக இடித்துச் சேர்க்கவும்.
- வெல்லத்தை அதிகமாகச் சேர்க்க வேண்டாம். சிறிய துண்டு சேர்த்தால் புளிப்பு, காரம் ஆகிய சுவைகளைச் சமநிலைப்படுத்தும்.
- ரசம் நன்றாக நுரைத்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். அதிக நேரம் கொதிக்க வைத்தால் ரசத்தின் சுவை மாறலாம்.
- விருப்பப்பட்டால் எண்ணெய்க்குப் பதிலாக நெய்யில் தாளித்துச் சேர்க்கலாம்.
சூடான வெங்காய ரசம் சாப்பிடுவது தனி சுகம்
இந்த ரசத்தைச் சாதத்துடன் மட்டுமல்லாமல், சூடாக ஒரு கிண்ணத்தில் ஊற்றியும் ரசித்து அருந்தலாம். மழைக்காலத்தில் சூடான வெங்காய ரசம் சாப்பிடுவது தனி சுகம்.





