திருமணமான 3 நாட்களில் காதல் தம்பதி வீடு புகுந்து வெட்டி படுகொலை.. காரணம் என்ன? கைதான தந்தை பகீர் தகவல்!
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து 3 நாட்களே ஆன புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம் உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முருகேசன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார். கூலித்தொழிலாளி. இவரது மகன் மாரிசெல்வம்(23). தனியார் ஷிப்பிங் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மாரிச்செல்வமும், திருவிக நகரைச் சேர்ந்த பால் வியாபாரம் செய்து வரும் முத்துராமலிங்கம் என்பவரின் மூத்த மகள் கார்த்திகாவுடன் மாரிச்செல்வத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் இருவீட்டார் பெற்றோருக்கு தெரியவந்தது.
இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் கார்த்திகாவின் குடும்பத்தினர் இவர்கள் காதலுக்கு சம்மதிக்கவில்லை. கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், காதலி மாரிசெல்வத்தை திருமணம் செய்தில் உறுதியாக இருந்தார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 30ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி கோவில்பட்டியில் பதிவு திருமணம் செய்துகொண்டனர். மாரிசெல்வத்தின் காதல் திருமணத்தை அவரது வீட்டில் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டதால் மாரிச்செல்வம், கார்த்திகா மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர். அப்போது நேற்று மாலை 6 மணியளவில் 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து இருவரையும் சராமரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பெண்ணின் தந்தையே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம், உறவினரான கருப்பசாமி மற்றும் பரத் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் காத்திகாவின் தந்தையிடம் விசாரணை நடத்திய போது இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் மாரிச்செல்வம் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் என்பதால் கார்த்திகாவின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். காதல் திருமணம் செய்த மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.