போலி அழைப்புகள்: தொலைத் தொடர்புத்துறை எச்சரிக்கை!
போலி அழைப்புகள் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
போலி அழைப்புகள் தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள தொலைத் தொடர்புத்துறை, www.sancharsaathi.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், தங்கள் மொபைல் எண் துண்டிக்கப்படப் போவதாக வரும் போலி அழைப்புகள் குறித்து அச்சம் அடைய வேண்டாம் என்று தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறை (டிஓடி) பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
வெளிநாட்டு எண்களிலிருந்து வரும் (+92-xxxxxxxxxx போன்ற) வாட்ஸ்அப் அழைப்புகள் அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்றுவது குறித்தும் தொலைத் தொடர்புத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுபோன்ற அழைப்புகள் மூலம் இணையதள குற்றவாளிகள் இணையதளக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளை செய்ய திட்டமிட முயற்சிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புத் துறை மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் சார்பில் இது போன்ற அழைப்புகளைச் மேற்கொள்ள யாருக்கும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்குரிய மோசடி அழைப்புகள் தொடர்பான தகவல்களை www.sancharsaathi.gov.in/sfc என்ற இணையதள இணைப்பில் புகாரளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இணையதள குற்றங்கள், நிதி மோசடிகள் போன்றவற்றைத் தடுக்க இவ்வாறு புகாரளிப்பது உதவும்.
மீனவர் நலன்காக்க உருவாக்கப்பட்ட சங்கம் முடக்கம்: அண்ணாமலை கண்டனம்!
இணையதளக் குற்றங்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1930 என்ற உதவி எண்ணையோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தையோ பயன்படுத்தலாம் எனவும் தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
சைபர் கிரைம் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. CHAKSHU வசதியின் கீழ், தீங்கிழைக்கும் குறுஞ்செய்திகளை அனுப்புவதில் ஈடுபட்டுள்ள 52 முதன்மை நிறுவனங்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 700 SMS டெம்ப்ளேட்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. பான்-இந்திய அடிப்படையில் 348 செல்போன்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்கிடமான 10,834 மொபைல் எண்களை சரிபார்க்குமாறு தொலை தொடர்பு நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. அதில், 8272 மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சைபர் கிரைம்/நிதி மோசடிகளில் ஈடுபட்டதற்காக பான் இந்தியா அடிப்படையில் 1.86 லட்சம் மொபைல் கைபேசிகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.