அரைத்த மாவையே அரைத்தாரா?... அடிச்சு தூக்கினாரா? அட்லீயின் ஜவான் ரிசல்ட் என்ன?
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற ஹிட் படங்களை இயக்கிய அட்லீ, பாலிவுட்டில் இயக்கியிருக்கும் ஜவான் படத்தின் ரிசல்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் பயிற்சி பெற்றவர் அட்லீ. எந்திரன், நண்பன் போன்ற படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீயை இயக்குனராக அறிமுகப்படுத்தியது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான். அவர் தயாரித்த ராஜா ராணி படம் தான் அட்லீக்கு அடையாளத்தை கொடுத்தது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த அட்லீக்கு இரண்டாவது படமே நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்தது.
தளபதி தீவிர ரசிகனான அட்லீ, அவருக்காகவே தெறி என்கிற மாஸ் படத்தை கொடுத்து கில்லி போல் சொல்லி அடித்தார். அட்லீயின் மேக்கிங் ஸ்டைல் பிடித்துப்போனதால் தன்னுடைய அடுத்த படமான மெர்சலையும் இயக்கும் வாய்ப்பை அட்லீக்கு வழங்கினார் விஜய். அப்படத்தில் விஜய்யை மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்க வைத்து நிஜமாகவே ரசிகர்களை மெர்சல் ஆக்கினார் அட்லீ.
பின்னர் தளபதியின் மனம்கவர்ந்த இயக்குனராக மாறிய அட்லீ, அடுத்ததாக பிகில் படம் மூலம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து விஜய்யுடன் தன்னுடைய ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். அப்படியே விஜய்யை வைத்து படங்களை இயக்கியே காலத்தை ஓட்டிவிடலாம் என்கிற கனவோடு இருந்த அட்லீயை பாலிவுட்டுக்கு அனுப்பிவைத்து அவரை அடுத்த லெவலுக்கு உயர்த்தினார் விஜய். தளபதி கொடுத்த தெம்போடு பாலிவுட் சென்ற அட்லீ, அங்கு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... Jawan Leaked: அட கடவுளே... 'ஜவான்' படத்திற்கு வந்த சோதனை! அதிர்ச்சியில் இயக்குனர் அட்லீ மற்றும் ஷாருகான்!
அட்லீ படங்கள் என்றாலே அது ஏதாவது பழைய படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டு இருக்கும் என்கிற சர்ச்சை அவரது முதல் படமான ராஜா ராணியில் இருந்தே தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஜவான் படமும் விதிவிலக்கல்ல இதிலும் ரமணா, சர்க்கார், ஆரம்பம் என எக்கச்சக்கமான படங்களின் ரெபரன்ஸ் இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், படத்தை எந்தவித தொய்வும் இன்றி திரைக்கதையை விறுவிறுப்பாக அட்லீ கொண்டு சென்றுள்ளதாக பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
படத்தின் கதையை பொறுத்தவரை, இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவில் பார்த்து பழகிய ஒன்று தான். பெண் கைதிகள் உள்ள சிறையில் ஜெயிலராக இருக்கும் ஷாருக்கான், அங்குள்ள 6 பெண்களை வைத்து சமூகத்தில் மக்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளை களையெடுக்க களமிறங்குகிறார். அவருக்கு அவரது தந்தையும் உதவியாக இருக்கிறார். அந்த 6 பெண்கள் சிறைக்கு செல்ல காரணமாக இருக்கும் விஜய் சேதுபதிக்கும் ஷாருக்கானுக்கு இடையே பழைய பகை இருக்கிறது. அந்த பகை என்ன? அவர்கள் விஜய் சேதுபதியை பழிவாங்கினார்களா? என்பதை சொல்லும் படம் தான் ஜவான்.
கதை எங்கேயோ கேட்டது போல் இருந்தாலும் தன்னுடைய மாஸான திரைக்கதையால் மிரட்டி அனைவரையும் அடிபொலி சொல்ல வைத்திருக்கிறார் அட்லீ. பாலிவுட்டிலும் அரைத்த மாவையே அரைத்திருந்தாலும், விறுவிறுப்பான கதைக்களத்தால் அடிச்சு தூக்கி இருக்கிறார் அட்லீ. படத்தின் பிளஸ், மைனஸ் இரண்டுமே அனிருத் தான். அவரது பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருந்தாலும், பாடல்கள் சற்று சொதப்பி உள்ளன. மற்றபடி ஜவான் அடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதையும் படியுங்கள்... லோகேஷ் கனகராஜிடம் ஸ்பெஷல் கோரிக்கை விடுத்த ஷாருக்கான்.. லியோ இயக்குனர் சொன்ன பதில்..