ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. பாமக பிரமுகர்களிடம் தீவிர விசாரணை.. என்ன காரணம் தெரியுமா?
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக பாமக பிரமுகர்கள் இரண்டு பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்ட போது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இவரது கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, தில்லை நகர் போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கொலை வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் பல ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை. இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.
சுமார் 11 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த வழக்கில் கொலையாளிகள் யார்? என்பது கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நீதிமன்ற உத்தரவின்பேரில் ராமஜெயம் வழக்கில் துப்பு துலக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தினார்கள். அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக பாமக திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத் மற்றும் பாமக தொழிலாளர் அணி நிர்வாகி பிரபாகர் ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வு போலீசார் அதிரடி விசாரணை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உமாநாத்திற்கு சொந்தமான வெர்சா காரை பிரபாகரன் பயன்படுத்தி வந்தன் காரணமாகவே விசாரணை நடைபெற்றது. ஆனாலும் இந்த விசாரணையில் குறிப்பிடும்படி எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.