பிறந்தநாளுக்கு ராஜ விருந்து வைத்த கமல்ஹாசன்! நாவில் எச்சில் ஊறவைக்கும் எக்கச்சக்க ஐட்டம்ஸ்.. ஃபுல் மெனு இதோ!
உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் பார்ட்டியில் பரிமாறப்பட்ட, உணவு வகைகள் பற்றிய முழு விவரங்கள் வெளியாகி, கேட்பவர்கள் நாவில் எச்சில் ஊற வைத்துள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தன்னுடைய 69-ஆவது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார். ஒரு பக்கம் ரசிகர்களும் - பிரபலங்களும் இவருக்கு சமூக வலைத்தளத்தில் மாறி மாறி தங்களின் வாழ்த்துக்களை மழை போல் பொழிய, மற்றொருபுறம் தற்போது இவர் நடித்து வரும், இந்தியன் 2, கல்கி, தக் லைஃப் ஆகிய படங்களின் அப்டேட்டும் வெளியாகி இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
கடந்த ஆண்டு கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தின் சூப்பர்... டூப்பர் வெற்றிக்கு பின்னர், வேற லெவல் எனர்ஜியுடன் செயல் பட்டுவரும் கமல்ஹாசன், திரைப்பட பணிகள், அரசியல், பிக்பாஸ், பட தயாரிப்பு என ஓய்வில்லாமல் ஓடி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கமல்ஹாசன் தன்னுடைய பிறந்தநாளுக்கு நண்பர்கள், திரையுலக பிரபலங்களுக்கு தனி பார்ட்டியையும், பத்திரிக்கை நண்பர்களுக்கு என சிறப்பு பர்த்டே பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் பரிமாறப்படும் உணவுகளை, ஸ்டார் குக் லிஸ்டில் உள்ள மதப்பட்டி ரங்கராஜன் தான் செய்திருந்தார். கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டியில் பரிமாறப்பட்ட உணவுகள் குறித்து, இவர் வெளியிட்டுள்ள மெனு கேட்பவர்கள் நாவில் எச்சில் ஊறவைக்கும் விதத்தில் உள்ளது.
சரி கமலின் இந்த ராஜ விருந்தில் இடம்பெற்ற ஐட்டம்ஸ் பற்றி பார்க்கலாம், "நூல் பரோட்டா, நீலகிரி சிக்கன் கிரேவி, நீலகிரி மஸ்ரூம் கிரேவி, கொங்கு ஸ்பெஷல் ஃபயர் வுட் மட்டன் தம் பிரியாணி, கொங்கு ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி, ரைத்தா, பொன்னி அரிசி சாதம், மட்டன் சிறுவாணி தண்ணி குழம்பு, மதுரை அயிரை மீன் குழம்பு, எலும்பு ரசம், பெப்பர் ரசம், குல்கந்து தயிர்,சிக்கன் ரேஷ்மி டிக்கா, மதுரை மட்டன் கோலா உருண்டை, நல்லம்பட்டி நாட்டுக்கோழி வறுவல், தென்னங்குருத்து பொரியல், மினி பரோட்டா பெப்பர் சாப்ஸ், பிச்சு போட்ட கோழி வறுவல், வெஜ் கோலா உருண்டை, வைலட் கேபேஜ் தோரான், நாகர்கோவில் அவியல், கேரளா அட பிரதாமன் பாயசம், அப்பளம் ஊறுகாய் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
டெசர்ட் ஐட்டத்தில், மதுரை ஜிகர்தண்டா மற்றும் விருப்பாச்சி வாழைப்பழம் ஐஸ் பீடா ஆகியவை இடம்பெற்றிருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருந்தோம்பலில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்களிடம் தயவு செய்து உணவை வீணாக்க வேண்டாம், அதே நேரம் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் என்கிற அன்பு கோரிக்கையும் வைக்கப்பட்டது. இந்த ராஜ போக விருந்தில் உலக நாயகனும் கலந்து கொண்டு, பத்திரிகையாளர்களுடன் சாப்பிட்டார் என்பது கூடுதல் ஹை லைட்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D