கலைஞர் நூற்றாண்டு விழா இரண்டு நாள் திரையுலக பணிகள் நிறுத்தம்! விஜய் - அஜித் பங்கேற்பார்களா? வெளியான தகவல்!
மறைந்த முன்னாள் முதல்வர், கலைஞர் அவர்களின் மகத்தான சாதனைகளை போற்றும் விதமாக கலைஞர் 100 என்கிற பெயரில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே ரஜினி - கமல் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தபோது அதனை ஏற்றுக்கொண்டு இருவருமே கலந்து கலந்து கொள்வதை ஏற்றுக்கொண்ட நிலையில், விஜய் - அஜித் கலந்து கொள்வார்களா? என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், கலைஞர் அவர்கள் ஆற்றிய மகத்தான சாதனைகளை அவரது நூற்றாண்டில் கலைஞர்-கலைஞர் 100 எனும் மிக பிரம்மாண்டமான விழாவாக வரும் 24.12 .2023 ( ஞாயிறு) அன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் திரையுலகில் கதாசிரியராக, வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக அவர் எழுபத்து ஐந்து படங்களில் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்துள்ளார். நேரடி தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் படத்தலைப்பு வைத்தால் கேளிக்கை வரி ரத்து செய்து உதவினார். அரசாங்க இடங்களில் படப்பிடிப்பு நடத்தினால் பாதி கட்டணம் என்று அறிவித்தார். மேலும், திரைப்பட மானிய தொகையினை வருடந்தோறும் வழங்கினார். ஐந்து முறை அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தார்.
தனது வசனத்தால் மக்களின் சிந்தனையை தூண்டிவிட்டார். அவர் வசனம் எழுதிய ஒவ்வொரு படத்தின் துவக்கத்திலும் அவர் பேசும் பேச்சை கேக்கவே திரையங்கு நோக்கி ஏராளமான மக்கள் வந்தார்கள். இவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. அகில இந்திய அளவில், தெலுங்கு கன்னடம், பெங்காலி, மலையாளம், இந்தி மராத்தி, ஒரியா, குஜராத்தி, என பல மொழி திரைப்பட கலைஞர்களை இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலைஞர் வசனம் எழுதிய படங்களில் இருந்து பல்வேறு காட்சிகள் நேரடியாக நடித்து காட்ட திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர். இந்த மாபெரும் விழாவில் முதல்கட்டமாக கலைஞானி கமலஹாசன் அவர்களும் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் , இசைஞானி இளையராஜா அவர்களும் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த விழாவில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம் என்றும், விஜய் அஜித் ஆகியோர் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார் ஆர்.கே.செல்வமணி.
சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் குறைந்த பட்சம் 35000 பேர் இந்த விழாவினை அமர்ந்து பார்க்கும் வண்ணம் மேடை அமைக்கப்பட உள்ளது. இந்த மாபெரும் விழாவில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் நடனம், நாடகம், இசைக்கச்சேரி, ஒலி, ஒளி காட்சிகள், ட்ரோன்கள் படையெடுப்பில் கண்கவர் நிகழ்ச்சிகள் மேலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் உருவாக்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
இந்த விழாவினை திரை நட்சத்திரங்களும், திரைக்கலைஞர்களும் பங்கெடுத்து சிறப்பிக்க இருப்பதால் அடுத்த மாதம் (டிசம்பர்) 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் உட்பட திரை உலக வேலைகள் எதுவும் நடைபெறாது என்றும், இந்த மாபெரும் விழாவினை சிறப்பிக்கும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களும், மற்றும் மத்திய, மாநில அமைச்சர் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.இந்த மாபெரும் விழா குறித்த நிகழ்ச்சிகளின் விவரங்கள் அனைத்தும் திரை உலகினருக்கும், பொதுமக்களுக்கும் விரைவில் அறிவிக்கப்படும்." என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்று இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D