அமெரிக்காவில் Tony Bennett சிலை முன்பு ஸ்டாலின் உற்சாக போஸ்.! ஆல்பம் இதோ
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். நோக்கியா, பேபால் உள்ளிட்ட நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. , 39,000-க்கும் மேலான தொழிற்சாலைகள், 2.6 மில்லியன் அளவிற்கு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள், என இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடன் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின், சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை. கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து. தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்டாலினை கண்ணீர் விட வைத்த 'வாழை' திரைப்படம் - அமெரிக்காவில் இருந்து பாராட்டு
முதலமைச்சரின் அமெரிக்கா பயணத்தின் ஓய்வு நேரத்தில் பல இடங்களை சுற்றிப்பார்த்தார். அப்போது சான்பிரான்சிஸ்கோவில் Tony Bennett சிலை முன்பு தனியாகவும், தனது மனைவியோடும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். வாழை திரைப்படத்தை சான்பிரான்சிஸ்கோவில் பார்த்தவர் அங்கிருந்து இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாலை சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ சென்று சேர்ந்தார். அவருக்கு விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று சிகாகோவில் பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசவுள்ளார். மேலும் சிகாகோ வாழும் தமிழர்களையும் சந்திக்கவுள்ளார்.