நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! அவரே வெளியிட்ட புகைப்படங்கள் - குவியும் வாழ்த்து!
பிரபல நடிகரும், முன்னாள் அமைச்சருமான நெப்போலியனின் மூத்த மகனுக்கு விரைவில் திருமணமாக உள்ள நிலையில், நேற்று இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதுகுறித்த சில புகைப்படங்களை அவர் வெளியிட, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக மாறிய ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் நெப்போலியன். திருச்சியில் பிறந்து அங்கேயே தன்னுடைய கல்லூரி படிப்பை முடிந்த நெப்போலியன் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் பின்னர் சென்னைக்கு வந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். இவரின் உயரம் மற்றும் தோற்றத்தை பார்த்து, இயக்குனர் பாரதி ராஜா 1991-ஆம் ஆண்டு தான் இயக்கிய 'புது நெல் புது நாத்து' படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
மெல்ல மெல்ல... வில்லன் தோற்றத்தில் இருந்து வெளியே வந்த நெப்போலியன் ஹீரோவாகவும், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோல்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். அப்படி இவர் நடித்த, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, கிழக்கு சீமையிலே, மிட்டா மிராசு, போக்கிரி, தசாவதாரம் உள்ளிட்ட படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்க கூடிய படங்களாக உள்ளன.
100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நெப்போலியன், நடிப்பை தாண்டி அரசியலிலும் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தார். திமுக தலைவர் கலைஞர் மீது இருந்த பற்று காரணமாகவும், தன்னுடைய மாமா கே.என் நேரு அமைச்சராக இருந்ததாலும் திமுகவில் இணைந்து, வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் மத்திய இணை அமைச்சராக இருந்தார். மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்தவர், கட்சியில் இருந்து அழகிரி நீக்கப்பட்டதையடுத்து பாஜக கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
தன்னுடைய மூத்த மகனுக்கு ஏற்பட்ட அரியவகை பிரச்சனை காரணமாக... அமெரிக்காவிலேயே செட்டில் ஆகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனாலும் அமெரிக்காவில் விவசாயத்தை ஊக்குவித்தும் விதத்தில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் தன்னுடைய மகனுக்கு ஏற்பட்ட பிரச்சனைபோல் யாரும் பாதிக்க கூடாது என்பதற்காக, தமிழகத்தில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும் இலவச மருத்துவமனை ஒன்றையும் கட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷின் திருமணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட சில பிரபலங்களை சந்தித்து அழைப்பு விடுத்ததாக கூறப்பட்டது.
இதுவரை தனுஷ் திருமணம் செய்து கொள்ள உள்ள அக்ஷயா என்கிற பெண்ணின் புகைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நேற்று தனுஷ் - அக்ஷயா திருமண நிச்சயதார்த்தம் அமெரிக்காவில் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சிலவற்றை தனுஷ் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கூடிய விரைவில் இவருக்கு திருமணம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.