2024-ல் கோலிவுட் தலையில் தூக்கி கொண்டாடிய டாப் 10 மூவீஸ் - ஒரு பார்வை
Top 10 Tamil Movies 2024 : தமிழ் சினிமாவில் 2024-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற டாப் 10 படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
Top 10 Tamil Movies 2024
சினிமா, மக்களை மகிழ்விக்கும் ஒரு இடமாக உள்ளது. மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் படங்கள் காலம் கடந்து கொண்டாடப்படும். அதே வேளையில் படம் கனெக்ட் ஆகாவிட்டால் அப்படம் எந்த அளவு புரமோஷன் செய்தாலும் எடுபடாது. அந்த வகையில் 2024-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்கள் வந்துள்ளன. அவற்றில் டாப் 10 படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Amaran
1. அமரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. சிவகார்த்திகேயன் கெரியரில் அதிக வசூல் ஈட்டிய படம் அமரன் தான்.
Maharaja
2. மகாராஜா
2024-ம் ஆண்டு மக்கள் அதிகம் கொண்டாடிய படங்களில் மகாராஜாவும் ஒன்று. இப்படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கி இருந்தார். விஜய் சேதுபதியின் 50வது படமான இது மாபெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ரூ.110 கோடி வசூலித்து இருந்தது. சுமார் 5 மாத இடைவெளிக்கு பின் ஜப்பானில் 40 ஆயிரம் திரைகளில் ரிலீஸ் ஆன மகாராஜா படம் அங்கும் 40 கோடிக்கு மேல் வசூல் வேட்டையாடி வருகிறது.
Lubber Pandhu
3. லப்பர் பந்து
தமிழ் சினிமாவில் எதிர்பாரா ஹிட் அடித்த படம் தான் லப்பர் பந்து. இப்படமும் முழுக்க முழுக்க பாசிடிவ் விமர்சனங்களையே பெற்றது. இந்த ஆண்டு தயாரிப்பாளருக்கு அதிக சதவீதம் லாபம் ஈட்டித் தந்த படமும் இதுதான். ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ், சுவாசிகா ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
Garudan
4. கருடன்
விடுதலை படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சூரி ஹீரோவாக நடித்த படம் கருடன். இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன், ரோஷினி ஆகியோர் நடித்த இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் வசூல் அள்ளியது.
GOAT
5. தி கோட்
நடிகர் விஜய் நடிப்பில் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் 450 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி வாகை சூடியது.
இதையும் படியுங்கள்... கங்குவா கசக்குது; புஷ்பா 2-னா இனிக்குதா? பாரபட்சம் காட்டுகிறதா கோலிவுட்!
Vaazhai Movie
6. வாழை
மாரி செல்வராஜ் தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்கிய திரைப்படம் வாழை. திவ்யா துரைசாமி, கலையரசன், நிகிலா விமல் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியதோடு மக்கள் மனதில் ஆழமாக பதிந்த படமாகவும் மாறியது.
Demonte Colony 2
7. டிமாண்டி காலனி 2
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்த படம் டிமாண்டி காலனி 2. இப்படம் சுதந்திர தின விடுமுறையில் திரைக்கு வந்தது. இதில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பேய் ஹிட் அடித்தது.
Meiyazhagan
8. மெய்யழகன்
சூர்யா தயாரிப்பில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்த படம் மெய்யழகன். 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கிய இப்படத்தில் அரவிந்த் சாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பற்றி பேசிய இப்படம் நடிகர் சூர்யாவுக்கு 25 சதவீதம் லாபத்தை அள்ளிக்கொடுத்தது.
Aranmanai 4
9. அரண்மனை 4
சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே மாதம் திரைக்கு வந்த படம் அரண்மனை 4. இப்படத்தில் தமன்னா கதையின் நாயகியாக நடித்திருந்தார். புதுவித கான்செப்ட் உடன் திரில்லிங் ஆன கதையம்சத்தில் இப்படம் உருவாகி இருந்ததால் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் இப்படம் ரீச் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.
Vettaiyan
10. வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு ஆயுத பூஜை விடுமுறைக்கு திரைக்கு வந்த படம் வேட்டையன். இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கி இருந்தார். போலி என்கவுண்டரை பற்றி எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் சோபிக்காவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்கள்... இதெல்லாம் இசையமைப்பாளர் வித்யாசாகர் பாடிய பாடல்களா? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!