பெண்ணால் எதுவும் முடியும்... சோதனைகளை கடந்து தமிழ் சினிமாவில் சாதனை படைத்த பெண் இயக்குனர்கள்!
ஆண்களால் மட்டுமே படம் இயக்க முடியும் என ஒரு காலத்தில் இருந்த நிலையில், பெண்களால் ஆண்களுக்கு நிகராக வெற்றிப்படங்களை கொடுக்க முடியும் என, பல்வேறு சோதனைகளை கடந்து... இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக உள்ள, பெண் இயக்குனர்கள் பற்றிய தொகுப்பு இதோ..
சுதா கொங்கரா:
இயக்குனர் சுதா கொங்கரா ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர். சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில், வரலாறு மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் படிப்பை முடித்த இவர், பின்னர்... படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில், பிரபல இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக சேர்ந்து, சில படங்களில் ஸ்கிரீன் பிலே ரைட்டராக பணியாற்றிய பின்னர், தன்னுடைய முதல் படத்தை தெலுங்கில் இயக்கினார். பின்னர், தமிழில் துரோகி படத்தின் மூலம் இயக்குரனாக மாறிய சுதா, தேசிய விருது வென்ற இயக்குனராக தன்னுடைய கடின உழைப்பால் உயர்ந்து நிற்கிறார்.
இவர் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான இறுதி சுற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதை தொடர்ந்து சூர்யாவை வைத்து இயக்கிய 'சூரரை போற்று' திரைப்படம் ஒட்டுமொத்த திரையுலகையும் இவர் பக்கம் திருப்பி பார்க்கவைத்த படமாக அமைந்தது. தற்போது இந்த படத்தை இந்தியின் அக்ஷய் குமார் நடிப்பில் ரீமேக் செய்து வரும் சுதா கொங்கரா, விரைவில் தன்னுடைய அடுத்த படத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சுமி ராமகிருஷ்ணன்:
தமிழில் மிகவும் வித்தியாசமான கதைகளை இயக்கி, நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு செயல்படும் முக்கிய பெண் இயக்குனர்களில் ஒருவர் நடிகையும், தொகுப்பாளினியும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.
கேரளாவை சேர்ந்த இவர், மலையாளத்தில் நடிகர் திலீப் நடித்த 'சக்கர முத்து' என்கிற படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் பிரிவோம் சந்திப்போம், எல்லாம் அவன் செயல், பொய் சொல்ல போறோம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் தன்னுடைய மனதில் உள்ள நல்ல கருத்துக்களை படமாக்க வேண்டும் என முடிவெடுத்த இவர், விஜி சந்திரசேகர் நடிப்பில் இயக்கிய ஆரோகணம் படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து, நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இயக்கினார். தற்போது ஆர் யூ ஓகே பேபி என்கிற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காயத்திரி புஷ்கர்:
கணவன் - மனைவியாக இணைந்து திரைப்படங்கள் இயக்கி வெற்றி வாகை சூடி வரும் தம்பதி. Master of Fine Arts in Film Making படிப்பை முடித்த இவர்கள், திரைப்படம் இயக்க வேண்டும் என்கிற முயற்சியில் ஒவ்வொரு படியாக ஏறி, சோதனைகளை கடந்து சாதனை படைத்தவர்கள். ஓரம் போ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர்கள், இயக்கிய விக்ரம் வேதா திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தற்போது அமேசான் பிரைம் தளத்திற்கு, வெப் சீரிஸ் இயக்கி வருகிறார்கள்.
ஹலீதா ஷமீம்:
தமிழகத்தில் பிறந்து வளர்ந்து, எந்த ஒரு திரைப்பட பின்னணியும் இன்றி... கோலிவுட் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்களில் ஒருவர், ஷலீதா. பூவரம் பீபீ படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், சில்லு கருப்பட்டி, புத்தம் புது காலை விடியாதா போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது மின்மினி என்கிற படத்தையும் இயக்கி உள்ளார்.
சிகிச்சைக்கு பணமில்லாமல் பரிதாப நிலையில் 'பிதாமகன்' பட தயாரிப்பாளர்! ஓடி வந்து உதவிய நடிகர் சூர்யா!
பிரியா வி:
இயக்குனர் மணிரத்னத்திடம் துணை இயக்குனராக இருந்து, பின்னர் இயக்குனராக மாறியவர்களில் முக்கியமான இயக்குனர் பிரியா. சினிமா மீதுள்ள ஆர்வத்தால், தனித்து நின்று அடுத்தடுத்து படங்களை இயக்கியவர். 2005 ஆம் ஆண்டு வெளியான, 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான இவர், இதை தொடர்ந்து கண்ணாமூச்சி ஏனடா, ஹீரோவா? ஸிரோவா போன்ற படங்களை இயக்கினார். கடைசியாக, ஜீ ஓடிடி தளத்திற்கு 'ஆனந்தம்' என்கிற வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை போலவே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த், ரேவதி, ஸ்ரீ ப்ரியா, கிருத்திகா உதயநிதி போன்ற பெண் இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும், அவர்கள் சினிமா பின்னணியை கொண்டு, திரையுலகில் அறிமுகமானவர்கள் என்பதால் வாய்ப்புகள் எளிதாகவே கிடைத்தது. ஆனால், வெற்றி என்பது தரமான படங்களை கொடுத்த பின்னர் தான் அவர்கள் வசமானது என்பது குறிப்பிடத்தக்கது.