தமிழ் சினிமா அதிக பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை வாரி வழங்கிய Golden Year எது தெரியுமா?
தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் ஹிட் கொடுப்பதே அபூர்வமாக இருக்கும் சூழலில், முன்பு ஒரே ஆண்டில் அதிகப்படியான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தமிழ் சினிமா கொடுத்திருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Golden Year of Tamil Cinema
தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அப்படி அதிகப்படியான படங்கள் ரிலீஸ் ஆனாலும் அதில் வெற்றிபெறும் படங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு வெற்றி சதவீதம் குறைவாகவே உள்ளது. ஒரு மாதத்திற்கு ஒரு ஹிட் படம் வருவதே அபூர்வமான விஷயமாக இருக்கிறது. இப்படி இருக்கையில், ஒரு ஆண்டில் அதிகப்படியான ஹிட் படங்கள் வெளிவந்து தமிழ் சினிமாவிற்கு கோல்டன் ஆண்டாக அமைந்திருக்கிறது. அது எந்த ஆண்டு? அந்த ஆண்டில் வெளியான படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் பொற்காலம்
அந்த கோல்டன் ஆண்டு வேறெதுவுமில்லை... 2007 தான். அந்த ஆண்டு வெளியான படங்களின் பட்டியலை சொன்னாலே அது எவ்வளவு ஸ்பெஷலான ஆண்டு என்பது புரிந்துவிடும். நடிகர் கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் ரிலீஸ் ஆனது அந்த ஆண்டில் தான். இது கார்த்தியின் முதல் படம் மாதிரியே இருக்காது. அந்த அளவுக்கு அனுபவமிக்க நடிகராக பின்னிபெடலெடுத்து இருப்பார் கார்த்தி. அமீர் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் மதுரையின் மண்வாசம் மாறாமல் கொடுத்திருந்தார்கள். அதேபோல் ஜோதிகா, பிருத்விராஜ் நடித்த மொழி படமும் 2007-ல் தான் ரிலீஸ் ஆனது. கவிதையை போன்ற ஒரு படைப்பு தான் இந்த மொழி. இப்படத்தை ராதா மோகன் இயக்கி இருந்தார்.
2007-ல் வந்த ஹிட் படங்கள்
இந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த மற்றுமொரு பிளாக்பஸ்டர் ஹிட் படம் தான் சென்னை 28. இதில் எல்லாருமே புதுமுகம். இது யுவன் சங்கர் ராஜா இசையமைத்த 50வது படமாகும். வெங்கட் பிரபு இயக்கிய முதல் படமான இது 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அடுத்ததாக விஷாலின் தாமிரபரணி ரிலீஸ் ஆனதும் 2007-ல் தான். ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த ஒரு பக்கா கமர்ஷியல் விருந்தாக இப்படத்தை கொடுத்திருந்தார் இயக்குனர் ஹரி. இந்த ஆண்டில் ஹரிக்கு டபுள் ஹிட். ஒன்று தாமிரபரணி, மற்றொன்று சூர்யாவின் வேல். இந்தப் படமும் 2007-ல் தான் ரிலீஸ் ஆனது.
ஹிட் கொடுத்த ரஜினி, அஜித், விஜய்
2007-ல் பொங்கல் விருந்தாக தளபதி விஜய்யின் போக்கிரி படம் ரிலீஸ் ஆனது. பிரபுதேவா இயக்கிய இப்படத்தில் ஒரு டயலாக் வரும், ‘இந்த பொங்கல் நமக்கு சூப்பர் கலெக்ஷன்மா’ என விஜய் பேசி இருப்பார். அவர் சொன்னதுபோலவே 2007ம் ஆண்டு போக்கிரி பொங்கலாகவே மாறியது. படமும் பாக்ஸ் ஆபிஸில் செம கலெக்ஷன் அள்ளியது.
இன்று டாப் டைரக்டராக இருக்கும் வெற்றிமாறன் முதன்முதலில் தனுஷை வைத்து இயக்கிய பொல்லாதவன் படம் ரிலீஸ் ஆனதும் 2007-ல் தான். வெற்றிமாறன் படத்தில் இவ்வளவு காமெடியா என சொல்லும் அளவுக்கு சந்தானம் மற்றும் கருணாஸின் காமெடி காட்சிகள் வேறலெவலில் இருந்தன. அதேபோல் பல்சர் பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய கிரேஸ் உருவானதற்கு காரணம் இந்த பொல்லாதவன் படம் தான்.
2007-ல் வெளிவந்த மற்றுமொரு பிளாக்பஸ்டர் ஹிட் படம் தான் சிவாஜி. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் இது. அப்படம் பான் இந்தியா லெவலில் ஹிட்டாகி தமிழ் சினிமாவில் அதிக கலெக்ஷன் அள்ளிய படமாகவும் மாறியது.
இப்படி எல்லா ஹீரோக்களும் ஹிட் கொடுக்க, நடிகர் அஜித்திற்கு அந்த ஆண்டில் ரிலீஸ் ஆன ஆழ்வார் பிளாப் ஆனது. பின்னர் வந்த கிரீடம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் 2007-ம் ஆண்டு டிசம்பரில் ஒரு வெயிட்டான படத்தை இறக்கினார் அஜித். அதுதான் பில்லா. ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் படமா என அனைவரையும் வாயைபிழக்க வைத்தது பில்லா.