காட்டுத்தீ போல் பரவிய பாலி*ல் புகார்... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த விஜய் சேதுபதி
தலைவன் தலைவி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டு வந்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக விஜய் சேதுபதி கூறி உள்ளார்.

Vijay Sethupathi Reply For Allegations
சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக எழுந்த பாலி*ல் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. ரம்யா மோகன் என்ற பயனர் எக்ஸ் தளத்தில், விஜய் சேதுபதி தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை பல ஆண்டுகளாகச் சுரண்டியதாகவும், அந்தப் பெண் இன்னும் வாழ்க்கையில் மீண்டு வர முயற்சி செய்து வருவதாகவும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து பின்னர் நீக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு பெரும் செய்தியானதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக தனது விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
பெண்ணின் புகாரை மறுத்த விஜய் சேதுபதி
அதில் அவர் கூறியதாவது : “என்னைச் சிறிதளவேனும் அறிந்தவர்கள் இந்தக் குற்றச்சாட்டைக் கேட்டு சிரிப்பார்கள். என்னை எனக்குத் தெரியும். இதுபோன்ற மோசமான குற்றச்சாட்டுகள் என்னைப் பாதிக்காது. ஆனால் என் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் வருத்தப்படுகிறார்கள். ஆனால் நான் அவர்களிடம், கவனத்தை ஈர்க்கவே இந்தப் பெண் இப்படி ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். சில நிமிடப் புகழைப் பெறுவார், அதை அனுபவிக்கட்டும் என்று கூறினேன்” என்றார் விஜய் சேதுபதி.
சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு
மேலும் இந்தக் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், தனது வழக்கறிஞர் இதை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்க உள்ளதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்தார். கடந்த ஏழு ஆண்டுகளாக இதுபோன்ற பல அவதூறுகளை நான் சந்தித்துள்ளேன். என்னை இலக்காகக் கொண்ட இதுபோன்ற முயற்சிகள் எதுவும் இதுவரை என்னைப் பாதித்ததில்லை. அது ஒருபோதும் பாதிக்கவும் செய்யாது. தனது புதிய படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டு வந்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் விஜய் சேதுபதி கூறினார்.
விஜய் சேதுபதி பதிலடி
தொடர்ந்து பேசிய அவர், என் புதிய படம் நன்றாக ஓடுகிறது. என்னைப் பற்றி அவதூறு பரப்புவதன் மூலம் படத்தைப் பாதிக்கலாம் என்று சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் அது நடக்காது. இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் யார் மீதும் எதையும் கூறலாம். அதற்கு ஒரு சமூக ஊடகக் கணக்கு மட்டும் போதும் என்றார் விஜய் சேதுபதி. அவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி உள்ளது. திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் அப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் 50 கோடி வசூலை நெருங்கி வருகிறது. தற்போது நடிகர் விஜய் சேதுபதி பூரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

