வசூலில் பொன்னியின் செல்வன் 2-வையே ஓரங்கட்டிய பிச்சைக்காரன் 2.. பாக்ஸ் ஆபிஸில் விஜய் ஆண்டனி செய்த தரமான சம்பவம்
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலை விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் முறியடித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படமும் ஒன்று. சசி இயக்கிய இப்படம் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீஸாகி வசூலையும் வாரிக்குவித்தது. நடிகர் விஜய் ஆண்டனியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் பிச்சைக்காரன் அமைந்தது. பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு தமிழைப் போல் தெலுங்கு திரையுலகிலும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து இருந்தது.
பிச்சைக்காரன் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. முதலில் இப்படத்தை சசி இயக்குவதாக இருந்தது, பின்னர் அவர் வேறு படத்தில் பிசியானதால் வேறுவழியின்றி விஜய் ஆண்டனியே இப்படத்தை இயக்குவதாக அறிவித்தார். இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி.
பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கியதோடு மட்டுமின்றி அப்படத்தில் ஹீரோவாக நடித்து, தயாரித்து, இசையமைத்து, அதன் படத்தொகுப்பு பணிகளையும் விஜய் ஆண்டனியே மேற்கொண்டுள்ளார். முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததால் அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் கடந்த மே 19-ந் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீஸ் ஆனது.
இதையும் படியுங்கள்... அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா கஸ்டடி நாயகி கீர்த்தி ஷெட்டி? - அவரே அளித்த ஷாக்கிங் விளக்கம்
சுமார் 1500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்றாலும், வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது. அதன்படி பிச்சைக்காரன் 2 திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.3.25 கோடி வசூலித்து இருந்தது. இதைவிட தெலுங்கில் இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருந்தது. அதன்படி தெலுங்கு மாநிலங்களில் இப்படம் முதல் நாளில் ரூ.4.5 கோடி வசூலித்து இருந்தது.
இதில் மற்றுமொரு ஆச்சர்ய தகவல் என்னவென்றால், தெலுங்கில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் நாள் வசூலை பிச்சைக்காரன் 2 திரைப்படம் முறியடித்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தெலுங்கில் முதல் நாளில் ரூ.2.8 கோடி மட்டுமே வசூலித்து இருந்த நிலையில், பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரூ.4.5 கோடி வசூலித்து வேறலெவல் சாதானை படைத்துள்ளது. முதல் நாளைப் போல் இரண்டாம் நாளும் இப்படத்தின் வசூல் ஏறுமுகத்தில் தான் உள்ளது. இப்படம் 2 நாள் முடிவில் உலகளவில் ரூ.15 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... தியேட்டர் பிசினஸில் காலடி எடுத்து வைக்கும் நயன்தாரா..! சென்னையில் மல்டிபிளக்ஸ் கட்டும் லேடி சூப்பர்ஸ்டார்