சாமி பட வில்லன்.. நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு.. துயரத்தில் திரையுலகினர்
பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இன்று காலமானார். 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், தமிழ் சினிமாவிலும் தனது முத்திரையை பதித்தவர்.

கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு
இந்திய திரைத்துறையில் யாராலும் மறக்க முடியாத அளவுக்கு தடத்தை பதித்த நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இன்று (ஜூலை 13, 2025) காலமானார். 83 வயதான அவர், ஹைதராபாத், ஃபிலிம்நகர் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை 4 மணிக்கு மரணமடைந்தார். சில வருடங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சையில் இருந்த அவர், தனது மகனின் மரணத்துக்குப் பிறகு மனதளவில் சோர்ந்திருந்ததாக நெருங்கிய நண்பர்கள் கூறுகிறார்கள். அவரது மறைவு தெலுங்கு சினிமா மட்டுமல்ல, தமிழ்ப் பட உலகத்திற்கும் பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.
750-க்கும் மேற்பட்ட படங்கள்
1978-ஆம் ஆண்டு ‘பிரணம் கரீது’ என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். ஆனால் அதற்கு முன் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நாடக மேடையில் கலக்கியவர். வங்கி ஊழியராக இருந்தபோதும், மேடையில்தான் அவர் உண்மையான வாழ்க்கையை காண்பித்தார். மெதுவாக திரையுலகில் வில்லன், காமெடி, உணர்ச்சி மிகுந்த பாத்திரங்கள் என பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கினார்.
தமிழ் திரைப்படங்களிலும் முத்திரை பதித்த நடிப்பு
தமிழ் திரையுலகிலும் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் தனது திறமையை நிரூபித்துள்ளார். ‘சாமி’, ‘திருப்பாச்சி’ போன்ற பல வெற்றிப் படங்களில் முக்கிய பங்களிப்பு செய்தார் என்றே கூறலாம். அவர் நடித்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும், கதையை நகர்த்தும் சக்தி வாய்ந்தவை. பேசும் முறை, முகபாவனை, உடல் மொழி ஆகியவை அவரை தனித்து நிற்கச் செய்தன.
விருதுகளும் அரசியல் வாழ்க்கையும்
நடிப்பிற்காக 9 முறை நந்தி விருதுகள், SIIMA விருது (கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்) மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். 1999-ஆம் ஆண்டு விஜயவாடா கிழக்கு தொகுதியிலிருந்து MLA ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரையுலகிலும், சட்டமன்றத்திலும் சமமான ஈடுபாட்டுடன் செயல்பட்ட இவர், கலை மற்றும் சமூக சேவையிலும் முன்னோடியானவர்.
கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்
அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் சமூக ஊடகங்களில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஆன்மாவைக் கொடுத்தார், வில்லன், தந்தை, அரசியல்வாதி என எந்த வேடமாக இருந்தாலும், அதை திரையில் உயிர்ப்பித்து காட்டியவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். அவர் இன்று இல்லை என்றாலும், அவரது நடிப்பும், பாதிப்பும் என்றும் வாழும்.