- Home
- Cinema
- தமிழ் சினிமா மானத்தை காப்பாற்றிய அஜித்; 2025-ல் இதுவரை அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள் இதோ
தமிழ் சினிமா மானத்தை காப்பாற்றிய அஜித்; 2025-ல் இதுவரை அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள் இதோ
2025-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 இந்திய படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் ஒரே ஒரு தமிழ் படம் தான் உள்ளது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Top 10 Highest Grossing Movies
நாடு முழுவதும் சினிமா ரசிகர்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அதிகம் கவனிக்கத்தொடங்கி உள்ளனர். அந்த வகையில் 2025-ம் ஆண்டின் முதல் பாதியில் இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய டாப் 10 இந்திய படங்களின் பட்டியலில் ஐந்து பாலிவுட் படங்கள் இடம்பிடித்துள்ளன. மலையாளம் மற்றும் தெலுங்கிலிருந்து தலா இரண்டு படங்களும், தமிழிலிருந்து ஒரு படமும் இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அவை என்னென்ன படங்கள், அவற்றிற்கு எவ்வளவு வசூல் கிடைத்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய பாலிவுட்
முதலிடத்தில் பாலிவுட் படமான சாவா உள்ளது. விக்கி கெளஷல் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த இப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் இருந்து 807.88 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இரண்டாவது இடத்திலும் மற்றொரு பாலிவுட் படம் தான் உள்ளது. அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன் மற்றும் ரிதேஷ் தேஷ்முக் ஆகியோர் நடித்த ஹவுஸ்ஃபுல் 5 திரைப்படம் உலகளவில் ரூ.288.1 கோடி வசூல் செய்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 3, 4 மற்றும் 5 ஆகிய இடங்களை தென்னிந்திய திரைப்படங்கள் தான் பிடித்துள்ளன.
அஜித்தால் தப்பித்த கோலிவுட்
அதன்படி மூன்றாவது இடத்தில் மோகன்லாலின் மலையாளப் படமான எம்புரான் உள்ளது. இப்படத்தை பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கி இருந்தார். நான்காவது இடத்தில் வெங்கடேஷ் நடித்த தெலுங்குப் படமான சங்கராந்திக்கு வஸ்துன்னாம் படம் உள்ளது. ஐந்தாவது இடம் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் பிடித்துள்ளது. இதில் மலையாள படமான எம்புரான் 265.5 கோடியும், சங்கராந்திக்கு வஸ்துன்னாம் 255.2 கோடியும், குட் பேட் அக்லி திரைப்படம் 246.15 கோடியும் வசூலித்துள்ளன. இதில் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் 200 கோடிக்கு மேல் வசூலித்த ஒரே ஒரு படம் இதுதான்.
டபுள் ஹிட் கொடுத்த மோகன்லால்
ஆறாவது இடத்தில் அஜய் தேவ்கன் நடித்த பாலிவுட் படமான ரெய்டு 2 உள்ளது. இப்படத்தின் வசூல் ரூ.237 கோடி. ஏழாவது இடத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் திரைப்படமான துடரும் உள்ளது. இப்படம் உலகளவில் ரூ.234.5 கோடி வசூல் செய்திருந்தது. 8வது இடம் ஆமிர் கானின் கம்பேக் படமான சீதாரே ஜமீன் பர் படத்துக்கு கிடைத்துள்ளது. இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம் இதுவரை 214.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகி ரசிகர்களை ஈர்க்கத் தவறிய தெலுங்குப் படமான கேம் சேஞ்சர் 186.25 கோடி வசூல் உடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. 10வது இடத்தில் சல்மான் கானின் அட்டர் பிளாப் படமான சிக்கந்தர் உள்ளது. இப்படத்தின் உலகளாவிய வசூல் 184.6 கோடியாகும்.