2ம் நாளே கூட்டமின்றி காத்துவாங்கிய தக் லைஃப்; முதல் நாள் வசூலில் பாதி கூட வரலையா?
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூலித்து உள்ளது என்பதை பார்க்கலாம்.

Thug Life Box Office Collection Day 2
கமல்ஹாசன் - சிம்பு கூட்டணியில் முதன்முறையாக உருவான படம் தக் லைஃப். இப்படத்தை மணிரத்னம் இயக்கியதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமின்றி இப்படத்தில் திரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். அவரது இசையில் பாடல்களும் ஹிட்டானதால் ரிலீசுக்கு முன்பே படத்தின் மீதான ஹைப் மேலும் அதிகரித்தது. இப்படம் கடந்த ஜூன் 5ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.
தக் லைஃப் படத்தின் ரிசல்ட்
தக் லைஃப் திரைப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்ததால், தக் லைஃப் படத்தின் வெற்றியை மலைபோல் நம்பி இருந்தார் கமல்ஹாசன். ஆனால் அவரின் எதிர்பார்ப்புக்கு ஆப்பு வைக்கும் விதமாக இப்படத்தின் ரிசல்ட் அமைந்துள்ளது.
வசூலில் சரிவை சந்தித்த தக் லைஃப்
தக் லைஃப் திரைப்படம் வெளியான முதல் நாளே அதற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்தன. மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் புலம்பினர். கமல் ரசிகர்களே இப்படத்தை கழுவி ஊற்றினார்கள். அந்த அளவுக்கு படம் மோசமாக இருப்பதாக சாடினர். அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் இப்படத்தை ட்ரோல் செய்து ஏராளமான மீம்களும் போடப்பட்டு வருகின்றன. நெகடிவ் விமர்சனங்களால் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் கடும் சரிவை சந்தித்து உள்ளது.
தக் லைஃப் 2ம் நாள் வசூல் இவ்வளவு தானா?
அதன்படி முதல் நாள் உலகளவில் 50 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்ப்பட்ட இப்படம் வெறும் 36 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. அதிலும் இந்தியாவில் 17 கோடியும், வெளிநாட்டில் 19 கோடியும் இப்படம் வசூலித்தது. ஆனால் இரண்டாம் நாளில் முதல் நாள் வசூலில் பாதிகூட வரவில்லை. இப்படம் இந்திய அளவில் இரண்டாம் நாளில் வெறும் ரூ.7.5 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. மற்ற மாநிலங்களில் வசூல் மிகவும் கம்மியாக இருக்கிறது.
தக் லைஃப் 100 கோடி வசூலிக்குமா?
படத்திற்கு திரும்பிய பக்கமெல்லாம் நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்ததால், இரண்டாம் நாளில் பெரும்பாலான தியேட்டர்களில் தக் லைஃப் திரைப்படம் கூட்டமின்றி காத்துவாங்கியதாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் இப்படம் 100 கோடி வசூலை எட்டுவதே கேள்விக்குறி ஆகிவிடும். இன்று மற்றும் நாளை விடுமுறை தினங்கள் என்பதால் தக் லைஃப் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.