சிம்பு இல்ல; தக் லைஃப் கமல்ஹாசனையே பொறாமைப்பட வைத்த நடிகர் யார் தெரியுமா?
ஒவ்வொரு நடிகரையும் தனக்கான சவாலாக எடுத்துக்கொள்வேன் என கூறிய கமல்ஹாசன், தான் பார்த்து பொறாமைப்பட்ட நடிகர் பற்றி பேசி இருக்கிறார்.

Kamal Haasan praises Joju George
பான் இந்தியா அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக கமல்ஹாசனின் தக் லைஃப் மாறி உள்ளது. இதற்கு காரணம் அப்படத்தின் புரமோஷன் தான். திரும்பிய பக்கமெல்லாம் தக் லைஃப் பற்றிய பேச்சுகள் தான் உள்ளனர். ‘தக் லைஃப்’ படத்தில் கமலுக்கு அடுத்த படியாக சிம்புவின் நடிப்பை காண பலரும் ஆவலோடு இருக்கும் நிலையில், நடிகர் கமல்ஹாசன், தான் வியந்து பார்க்கும் நடிகர் என ஜோஜு ஜார்ஜை பாராட்டி இருக்கிறார். தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் ஜோஜு ஜார்ஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஜோஜுவின் நடிப்பை வியந்து பாராட்டிய கமல்
அவர் பற்றி கமல் கூறுகையில், “ஜோஜு என்ற நடிகரை எனக்குத் தெரியாது, இடையில் அவர் நடித்த ‘இரட்ட’ படத்தைப் பார்த்தேன். இரட்டைச் சகோதரர்களாக ஜோஜு நடித்திருந்தார். ஒரே பார்வையில் நமக்குப் புரியும், இவர் அந்த சகோதரர், அவர் இந்த சகோதரர் என்று. எனக்குப் பொறாமையை ஏற்படுத்திய நடிகர் ஜோஜு. புதிதாக வரும் ஒவ்வொரு நடிகரையும் எனக்கான சவாலாக எடுத்துக்கொள்பவன் நான். ஆனால் அவர்களைப் பாராட்டவும் வரவேற்கவும் வேண்டியது என் கடமை” என்று கமல் கூறினார்.
ஜோஜுவை விட்டுத்தர மாட்டோம்
கொச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ஜோஜுவை இனி மலையாளத்திற்கு விட்டுத் தருவோமா என்பது சந்தேகம் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். ஏனெனில் ஜோஜு ஜார்ஜ் தற்போது தமிழில் அதிக படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான சூர்யாவின் ரெட்ரோ படத்தில் கூட ஜோஜு ஜார்ஜ் வில்லனாக நடித்திருந்தார். இதையடுத்து அவர் மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தக் லைஃப் கமல்
37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணையும் படம் தக் லைஃப். இப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. யு/ஏ சான்றிதழ் பெற்ற இப்படத்தின் மொத்த நீளம் 165 நிமிடங்கள். சிலம்பரசன், ஜோஜு ஜார்ஜ், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், அசோக் செல்வன், அலி ஃபாசல், பங்கஜ் திரிபாதி, ஜிஷு சென்குப்தா, சன்யா மல்ஹோத்ரா, ரோஹித் ஷெரஃப், வையாபுரி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளது.