- Home
- Cinema
- நான் CM ஆவதற்காக அரசியலுக்கு வரவில்லை; நானே ஒரு பிட்டு தான் - கமல்ஹாசனின் Thug Life பேச்சு
நான் CM ஆவதற்காக அரசியலுக்கு வரவில்லை; நானே ஒரு பிட்டு தான் - கமல்ஹாசனின் Thug Life பேச்சு
தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது, அதில் படத்தின் நாயகன் கமல்ஹாசன் என்ன பேசினார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Kamalhaasan Speech in Thug Life Movie Audio Launch
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது : “சினிமா பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும், ஆனால் எடுக்கும் போது இருக்காது. நான் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அதில் நான் படம் எடுக்க வரும்போது எனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் நிறைய இருந்தன. அந்த கண்ணீர் ஓடையை தாண்டி தாண்டி தான் வந்துகொண்டிருக்கிறேன். அதெல்லாம் நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. ஏன் தெரியுமா... அந்த வன்மம்களெல்லாம் கேட்காமல், உங்கள் ஆரவாரம் என்னை தூக்கிவிட்டது. கண்ணீர் துடைத்துவிட்டது என்பது தான் உண்மை.
சிம்புவுக்கு கமல் வைத்த கோரிக்கை
என்கூடவே இருந்தவர்கள் எனக்கு ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் எப்படி நன்றி சொல்வது. அதுக்குத்தான்யா அரசியலுக்கு வந்தேன். நான் முதலமைச்சர் ஆவதற்காக வரவில்லை. எம்.எல்.ஏ, எம்.பி எல்லாம் எனக்கு புரியாது. ஆனால் 40 வருஷமா ஒரு எம்.எல்.ஏ ஒரு தொகுதியில் என்ன செய்ய வேண்டுமோ... அதை நாங்கள் தமிழகத்துக்கு மெதுவாக செய்துகொண்டிருக்கிறோம். என்கூட உழைத்த தம்பிகளெல்லாம், பெரியவர்களாக, பெரிய மனிதர்களாக சமூதாயத்தில் நடந்து கொண்டிருப்பது எனக்கு பெருமை. உங்கள் தம்பிகளும் அப்படி நடக்க வேண்டும், நடக்க வைக்க வேண்டும் எஸ்.டி.ஆர் என சிம்புவிடம் கமல் கோரிக்கை வைக்க, அதற்கு சிம்புவும் ஆமோதித்தார். அதேபோல் உங்களுக்கு கடமை இருக்கிறது இந்த கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள் என கமல் தெரிவித்தார்.
ராஜ்மகல் நிறுவனம் பற்றி கமல் நெகிழ்ச்சி
தொடர்ந்து பேசிய கமல், ராஜ்மகல் நிறுவனத்துக்கு பக்கபலமாக இருந்தது என் அண்ணன் சந்திரஹாசன். நான் செய்த எல்லா கோளாறுகளுக்கும் சிகிச்சை செய்து என்னை கொண்டு வந்தவர் அவர். அய்யய்யோ அண்ணன் போயிட்டாரே என்று இருந்தபோது எனக்கு கிடைத்த தம்பி தான் மகேந்திரன். இங்கே விற்க வந்தது தக் லைஃப் அல்ல, நல்ல சினிமாவை. தக் லைஃபை நீங்கள் ஏதாவது ஒரு விலையில் வாங்கிவிடுவீர்கள் என நம்பிக்கை இருக்கிறது. நான் சாட்டிலைட்டும், டிஜிட்டல் உரிமை மட்டும் தான் விற்றிருக்கிறேன். மற்றபடி நாங்கள் விநியோகம் செய்கிறோம்.
எங்கள் விவசாயம் சினிமா - கமல்
உங்களை நம்பி ஒரு நல்ல சினிமாவை தயாரித்திருக்கிறேன். உரம் போட்டு இருக்கிறேன். உழுதிருக்கிறேன். விவசாயிக்கு இதைத்தவிர வேறு ஒன்றும் தெரியாது. எங்கள் விவசாயம் சினிமா. அதில் யாராவது கார்பரேட் பண்ணாமல் இருப்பதற்காக தான் மணி சார் மாதிரி தோழர்கள் எனக்கு இருக்கிறார்கள். நான் கடந்து வந்த பாதையில்.... கலைஞர் டயலாக் சொன்ன மாதிரி, ‘பாட்டளிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படம் எடுக்கும் பாம்புகள் நெலிந்திருக்கின்றன. ஆகாயத்திற்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுற்றப்படுத்துகிறதே மீன்... அதைப்போல நான்’. இது கலைஞர் சொன்னது.
நானே பிட்டு தான் - கமல் பேச்சு
நான் பேசுகிற எல்லாமே காப்பி அடிச்சது தான். பிட்டு அடிக்கிறீங்களானு கேட்டாரு. நானே பிட்டு தான். பள்ளிக்கூடத்துக்கும் போக பையன். பிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கும் செல்லாத பையன் பிட்டு அடிக்காம என்ன பண்ணுவான். இதுபோதாதுனு எனக்கு டாக்டர் பட்டம் வேறு கொடுத்துவிட்டார்கள். என்னை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு, என்னை குழந்தை பருவத்தில் இருந்து தூக்கி கொஞ்சிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு நன்றி, அதை எப்படி சொல்வதென்றால், அடுத்த படத்தில் நல்ல படமாக எடுத்து, தமிழ் சினிமாவை உயர்த்துவதில் ஒருவனாக, ஒரு கடைநிலை சினிமா ரசிகனாக இருப்பதையே நான் விரும்புகிறேன்” என கூறினார் கமல்ஹாசன்.