எழவே முடியாத அளவிற்கு அடி வாங்கிய 'தக் லைஃப்'.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகி 11 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை படம் செய்துள்ள வசூல் விவரங்கள் வெளியாகி உள்ளது.

Thug Life Box Office Collection
‘நாயகன்’ படம் வெளியாகி 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமலஹாசன் மணிரத்னம் இணைந்து இருந்த திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. இந்த திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகியிருந்தது. படத்தில் சிலம்பரசன், திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். படம் வெளியாகி 11 நாட்களை கடந்துள்ள நிலையில் வசூலில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் படம் உருவாகி இருந்த நிலையில், கன்னடம் தவிர பிற மொழிகளில் படம் வெளியாகி இருந்தது.
பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்த ‘தக் லைஃப்’
“கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது” என ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில் கமலஹாசன் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் இந்த படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டது. கர்நாடகாவில் படம் வெளியாகாமல் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் மற்ற நான்கு மொழிகளிலும் படம் வெளியானது. படத்திற்கு செய்யப்பட்ட புரமோஷன் பணிகள், டீசர் டிரெய்லர் அனைத்தும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து இருந்தது. ரசிகர்கள் இந்த படத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும். படத்தின் திரைக்கதை ரசிகர்களை கவரவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
திரைக்கதையில் சொதப்பிய ‘தக் லைஃப்’
படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் பலரும் கிளைமாக்ஸில் சிம்பு மரணிப்பது போன்ற காட்சிகளை எதிர்பார்க்கவில்லை என்றும், திரைக்கதை கொஞ்சமும் நன்றாக இல்லை என்றும், பல இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்ததாகவும் கருத்துக்களை கூறினர். மேலும் சமூக வலைதளங்களிலும் படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தது. இதனால் பலரும் படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்க்க விரும்பவில்லை. ப்ரீ புக்கிங்கில் அதிக அளவு புக்கிங் செய்யப்பட்டிருந்த நிலையில், முதல் நாள் மட்டுமே வசூல் அதிகமாக இருந்தது. அடுத்தடுத்த நாட்களில் படக்குழுவினர் எதிர்பார்க்காத அளவிற்கு ‘தக் லைஃப்’ திரைப்படம் வசூலில் பலத்த அடி வாங்கியது.
வசூலில் பலத்த அடி வாங்கிய ‘தக் லைஃப்’
முதல் நாளில் ரூ.15.50 கோடி வசூலித்த இந்த படம், இரண்டாவது நாள் ரூ.7.15 கோடியாக சரிந்தது. மூன்றாவது நாள் ரூ.7.75 கோடி, நான்காவது நாள் ரூ.6.5 கோடி, ஐந்தாவது நாள் ரூ.2.3 கோடி, ஆறாவது நாள் ரூ.1.8 கோடி, ஏழாவது நாள் ரூ.1.55 கோடி, எட்டாவது நாள் ரூ.1.45 கோடி வசூலித்து இருந்தது. ஒரு வாரம் முடிவில் இந்திய அளவில் சுமார் ரூ.44 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. ஒன்பதாவது நாள் ரூ.75 லட்சமும், பத்தாவது நாள் ரூ.93 லட்சமும், 11வது நாள் ரூ.69 லட்சம் மட்டுமே வசூல் செய்து இருந்தது. 11 நாட்கள் கடந்த நிலையில் இந்த படம் இந்திய அளவில் சுமார் ரூ.46.37 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது. இது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வி ஆகும்.
அமைதி காக்கும் ‘தக் லைஃப்’ படக்குழு
இந்தப் படம் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. இருப்பினும் வசூலில் ரூ.50 கோடியை கூட நெருங்க முடியாமல் திணறி வருகிறது. கர்நாடகாவில் வெளியாகியிருந்தால் இன்னும் வசூல் அதிகரித்திருக்கலாம் என கூறப்படுகிறது. நாளுக்கு நாள் வசூல் சரிந்து வருவதால் விரைவில் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடப் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இத்தனை நாட்களைக் கடந்த பின்னரும் வசூல் விவரங்கள் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் ‘தக் லைஃப்’ படக்குழுவினர் அமைதி காத்து வருகின்றனர்.