‘தக் லைஃப்’ திரைப்படம் மக்களிடையே சரியான வரவேற்பு பெறாமல் போனதற்கான காரணங்களை பட்டியலிட்டு மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தோல்வியை சந்தித்த ‘தக் லைஃப்’ திரைப்படம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தக் லைஃப்’. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. எட்டு நாட்களைக் கடந்த நிலையில் ரூ.43 கோடி வரை மட்டுமே வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முத்த மழை பாடல்

படம் வெளியாவதற்கு முன்பே ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடல்கள் இணையத்தில் டிரெண்டாகத் தொடங்கின. குறிப்பாக ஜிங்குச்சா பாடலும், முத்தமழை பாடலும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் தற்போதும் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்றாக இருந்து வருகிறது. தீ பாடிய முத்த மழை வெர்ஷன் நன்றாக இருக்கிறதா? சின்மயி பாடிய வெர்ஷன் நன்றாக இருக்கிறதா? என்கிற விவாதத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நிகழ்த்தும் அளவிற்கு இந்த பாடல் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

‘தக் லைஃப்’ தோல்வி குறித்து மன்சூர் அலிகான் விளக்கம்

ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட இந்த பாடல் படத்தில் இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் படம் நாயகனை போல் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்களுக்கு திரைக்கதையில் ஏற்பட்ட பின்னடைவு பெரும் விரக்தியை கொடுத்தது. இந்த சூழ்நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறாமல் போனதற்கு முத்த மழை பாடல் படத்தில் இடம்பெறாததே காரணம் என்று நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ வெளியிட்டு விளக்கியுள்ளார்.

இறையருள் மிக்கவர் ரகுமான் - மன்சூர் புகழாரம்

வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, “ஏ.ஆர் ரகுமான் பாடல்களில் எப்போதும் பக்தி நிரம்பி இருக்கும். அவரது பாடல்களில் இறையருள் இருக்கும். நான் பக்திமான் கிடையாது. ஆனால் ஏ.ஆர் ரகுமான் பக்தி மானாக இருப்பதால் அவரது பாடல்களில் இறை அருள் இருப்பதை பார்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக “எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லாஹ் ஒருவனின்..” என்ற பாடலைப் போலவே “எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..” என்கிற பாடலை ரகுமான் உருவாக்கி இருந்தார்

முத்த மழை பாடல் இல்லாததே தோல்விக்கு காரணம்

அதை போல் ‘தக் லைஃப்’ திரைப்படத்திலும் இறைப் பாடலின் சந்தம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. “லா இலாஹா இல்லல்லாஹு லா இலாஹா இல்லல்லாஹுவில் இன்பம் கொள் நெஞ்சமே தூய கலிமா அதனை தினமும் ஓதுவாய் நெஞ்சமே..” என்ற பாடலைப் போன்றே “காலை கனவினில் காதல் கொண்டேன்..” என்கிற பாடலின் சந்தம் இடம் பெற்று இருக்கிறது. இது ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைத்த மிகப்பெரிய குடுப்பிணை. அவருக்கு இருக்கும் இறையருளையே இது காட்டுகிறது. அவர் இசையமைக்கும் படங்களில் நடிக்க முடியவில்லை என்கிற எண்ணம் எனக்கு எப்போதும் இருக்கிறது.

மன்சூர் அலிகானுக்கு ஆதரவாக பதிவிடும் ரசிகர்கள்

ஏ.ஆர் ரகுமான் எப்போதும் போல அவரது சிறந்த படைப்புகளை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அத்தகைய ரகுமானின் பாடல் இடம் பெறாதது தான் ‘தக் லைஃப்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறாததற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்” என மன்சூர் அலிகான் அந்த வீடியோவில் பேசியுள்ளார். அவரது கருத்தை பலரும் வரவேற்று அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

Scroll to load tweet…