‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகி 8 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 8 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
Thug Life 8th Day Collection
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, கலவையான விமர்சனத்தை பெற்ற திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. மணிரத்னம் இயக்கத்தில், கமலஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. முன்னதாக படத்தில் இருந்து வெளியான டிரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருந்தன. படத்தின் புரமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்றதால் மக்களுக்கு படம் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
ரசிகர்களை ஏமாற்றிய ‘தக் லைஃப்’ திரைப்படம்
ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை ‘தக் லைஃப்’ திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். படத்தின் திரைக்கதை ரசிகர்களை கவரவில்லை. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்ததாக கூறினர். மேலும் படத்தின் கிளைமாக்ஸில் சிம்பு கொல்லப்படுவது போல காட்டப்படுவது சிம்பு ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருந்தது. பல இடங்களில் லாஜிக் மீறல்கள், முத்த மழை பாடல் இடம் பெறாதது, மோசமான திரைக்கதை, சமூக வலைத்தளங்களில் எழுந்த நெகட்டிவ் விமர்சனம் ஆகியவை படத்தின் வசூலை மிகப்பெரிய அளவில் பாதித்தன. ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டிருந்த ‘தக் லைஃப்’ திரைப்படம் முதல் நாள் மட்டுமே அதிக வசூலை கொடுத்திருந்தது.
வசூலில் கடும் பின்னடைவை சந்தித்த ‘தக் லைஃப்’
முதல் நாளில் இந்த திரைப்படம் சுமார் 15 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவிற்கு வசூலித்ததாக கூறப்படுகிறது. இரண்டாவது நாள் ரூ.7.15 கோடியும், மூன்றாவது நாள் ரூ.7.75 கோடியும் வசூலித்திருந்தது. நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை அதிக வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ரூ.6.5 கோடி மட்டுமே வசூலைப் பெற்றிருந்தது. ஐந்தாவது நாள் ரூ.2.3 கோடியும், ஆறாவது நாள் ரூ.1.8 கோடியும், ஏழாவது நாள் ரூ.1.22 கோடியும், எட்டாவது நாள் ரூ.1.15 கோடியும் வசூலித்துள்ளது. இந்திய அளவில் 8 நாட்களில் மொத்தம் ரூ.43.37 கோடியை மட்டுமே ‘தக் லைஃப்’ திரைப்படம் வசூலித்துள்ளது.
8 நாட்களில் ‘தக் லைஃப்’ செய்த வசூல்
வசூல் ரீதியாக ‘தக் லைஃப்’ திரைப்படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் விரைவில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வசூல் விபரங்கள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் விவரங்களை வெளியிடும் Sacnik போன்ற இணையதளங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை மட்டுமே. அதிகாரப்பூர்வ வசூல் விவரங்களை படக்குழுவினர் மட்டுமே வெளியிடுவர். ஆனால் 8 நாட்களைக் கடந்த போதிலும், அதிகாரப்பூர்வ வசூல் விவரங்களை வெளியிடாமல் ‘தக் லைஃப்’ படக்குழுவினர் அமைதி காத்து வருகின்றனர்.
