மூன்று நாள் முடிவில் 'படை தலைவன்' செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
‘படை தலைவன்’ திரைப்படம் மூன்று நாள் முடிவில் செய்துள்ள வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது.

Padai Thalaivan Box Office Collection:
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் ‘படை தலைவன்’. இந்த படத்தை ‘வால்டர்’, ‘ரேக்ளா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் யு.அன்பு இயக்க, இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், முனீஷ்காந்த், கருடன் ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வி.ஜே கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் ஜகநாதன் பரமசிவம் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் ஒரு காட்சியில் தோன்றியிருக்கிறார்.
‘படை தலைவன்’ படத்தின் கதைக்களம்
பொள்ளாச்சி அருகே ஒரு மலைக்கிராமத்தில் கஸ்தூரி ராஜா தனது மகன் வேலு (சண்முக பாண்டியன்) மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மேலும் மணியன் என்ற யானையை பாசத்துடன் வளர்த்து வருகிறார். குடும்பத்தில் ஒரு உறுப்பினராக கருதப்படும் இந்த யானையை, ஒரு கும்பல் கடத்திச் சென்று விடுகிறது. யானை எதற்காக கடத்தப்பட்டது? அதை வேலு மீட்டாரா? யானையை மீட்க செல்லும் வழியில் அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் என்ன? என்பதே படத்தின் மையக்கரு. இந்த படம் ஒரு கிராமிய பின்னணியில், மனிதர்களுக்கும் காட்டு யானைகளுக்கும் இடையேயான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டுள்ளது. இந்த திரைப்படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருப்பதாக இயக்குநர் அன்பு தெரிவித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரிசாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் வெளியான ‘படை தலைவன்’
‘படை தலைவன்’ திரைப்படம் 2023 ஜூலை 14 அன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் 20 நாட்கள் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஒடிசா மற்றும் பாங்காக்கில் நடைபெற்றது. இப்படம் மே 23, 2025 அன்று வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திரையரங்குகள் ஒதுக்கீடு மற்றும் இன்னும் பிற சிக்கல்கள் காரணமாக வெளியீடு தள்ளிக் கொண்டே சென்றது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஜூன் 13, 2025 அன்று திரையரங்குகளில் ‘படை தலைவன்’ தமிழகம் எங்கும் உள்ள 500 திரையரங்குகளில் வெளியானது. விஜயகாந்த் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் நடிப்பில் வெளியாகும் முதல் படம் என்பதால் விஜயகாந்த் ரசிகர்கள் பலரும் இந்த படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.
'படை தலைவன்' மூன்று நாள் வசூல்
'படை தலைவன்' திரைப்படம், வெளியான முதல் மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.3.9 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் ரூ.1.29 கோடியையும் இரண்டாம் நாள் ரூ.1.22 கோடியையும், மூன்றாம் நாள் ரூ.1.39 கோடியையும் வசூலித்துள்ளது. முதல் மூன்று நாட்களில், குறிப்பாக வார இறுதி நாட்கள் காரணமாக வசூல் சற்று அதிகரித்துள்ளது. இந்த வசூல் விவரங்கள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களை வெளியிடும் இணையதளங்களில் அடிப்படையில் எடுக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ வசூல் குறித்து படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்த போதிலும், விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஒரு வரவேற்பு இருந்து வருகிறது.