பாக்ஸ் ஆபிஸில் தக் லைஃப் படத்துக்கே தண்ணிகாட்டிய படைத் தலைவன் - முதல் வசூல் எவ்வளவு?
விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படைத் தலைவன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Padai Thalaivan Day 1 Box Office Collection
நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு பின்னர் அவரது மகன் சண்முகப் பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் படைத் தலைவன். இப்படத்தை அன்பு இயக்கி உள்ளார். இப்படத்தில் சண்முகப் பாண்டியன் உடன் யாமினி, முனீஸ்காந்த், கஸ்தூரி ராஜா, அருள்தாஸ், கருடன் ராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக கேப்டன் விஜயகாந்தையும் ஏஐ மூலம் கேமியோ ரோலில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
படைத் தலைவன் வரவேற்பு எப்படி?
படைத் தலைவன் படம் கடந்த மாதமே ரிலீஸ் ஆவதாக இருந்து கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் திரைக்கு வந்த கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் சொதப்பியதால், இந்த வாரம் அதற்கு போட்டியாக படைத் தலைவன் படத்தை ரிலீஸ் செய்துள்ளனர். அதனுடன் எந்த பெரிய படங்களும் ரிலீஸ் ஆகாததால் இப்படத்திற்கு 500 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டன. கேப்டன் விஜயகாந்த் கேமியோ ரோலில் வருவதால் இப்படத்தை பார்க்க அவரது ரசிகர்கள் முதல் நாளில் படையெடுத்து வந்தனர். இதனால் பெரும்பாலான இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக இப்படம் திரையிடப்பட்டது.
படைத் தலைவன் முதல் நாள் வசூல்
படைத் தலைவன் படத்தில் விஜயகாந்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினாலும், படம் விமர்சன ரீதியாக சோபிக்கவில்லை. கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் சொதப்பி இருக்கிறார்கள் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது. படைத் தலைவன் திரைப்படம் முதல் நாளில் ரூ.50 லட்சத்துக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. சண்முகப் பாண்டியன் போன்ற புதுமுக நடிகர்களின் படத்திற்கு இது நல்ல தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.
தக் லைஃப் படத்துக்கு இணையான வசூல்
கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் படத்துக்கு போட்டியாக தான் படைத் தலைவன் படம் ரிலீஸ் ஆகி உள்ளது. படைத் தலைவன் நேற்று மட்டும் ரூ.50 லட்சம் வசூலித்திருந்த நிலையில், தக் லைஃப் படமும் நேற்று ரூ.60 லட்சம் தான் வசூலித்து இருந்தது. தக் லைஃப் போன்ற பெரிய பட்ஜெட் படத்திற்கு நிகராக படைத் தலைவன் போன்ற சிறு பட்ஜெட் படம் வசூலித்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் படைத் தலைவன் மேலும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.