- Home
- Cinema
- 25 ஆண்டுகளை கடந்தும் கொண்டாடப்படும் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படம்.. காரணங்கள் என்ன?
25 ஆண்டுகளை கடந்தும் கொண்டாடப்படும் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படம்.. காரணங்கள் என்ன?
‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பின்னரும் படம் கொண்டாடப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25 ஆண்டுகளை நிறைவு செய்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படம்
ராஜீவ் மேனன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டில் மம்முட்டி, அஜித், ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ் போன்ற பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. இதில் தபு சௌமியா என்கிற கதாபாத்திரத்திலும், ஐஸ்வர்யா ராய் மீனாட்சி என்கிற கதாபாத்திரத்திலும் சகோதரிகளாக நடித்தனர். மம்முட்டி கேப்டன் பாலா கதாபாத்திரத்திலும், அஜீத் மனோகர் என்ற கதாபாத்திரத்திலும், அப்பாஸ் ஸ்ரீகாந்த் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். வலிமையுடனும், சுயமரியாதையுடனும் தங்கள் வாழ்க்கையை கட்டமைத்துக்கொள்ளும் பெண்களின் கதையாக இது அமைந்திருந்தது.
ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்
இந்தப் படம் ஜேன் ஆஸ்டனின் பிரபலமான சென்ஸ் அண்ட் சென்சபிலிட்டி (Sense and Sensibility) என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. நாவலின் ஆழமான உணர்வுகள், சமூக எதார்த்தங்கள், பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் இந்திய சூழலுக்கு ஏற்றவாறு மிக அழகாக மாற்றி அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு அவர்களின் உணர்வுகள், லட்சியங்கள், போராட்டங்கள் மிக எதார்த்தமாக சித்தரிக்கப்பட்டன. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வெளிப்படுத்திய அற்புதமான நடிப்பு இந்த படத்திற்கு மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது.
இறுவேறு பெண்களின் அழகான காதல் கதை
ஒரு கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள், புதிய நகரத்திற்கு பிழைப்பு தேடிச் செல்லும் ஒரு குடும்பத்தின் போராட்டம், இரு உள்ளங்களுக்கு இடையே ஏற்படும் காதல், அதில் ஏற்படும் பிரிவு, மீண்டும் ஒரு வாய்ப்பு என அனைத்துமே அழகான முறையில் படமாக்கப்பட்டன. மிகைப்படுத்துதல் இன்றி அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள் போலவே காட்சிகள் அமைந்திருந்தன. முதல் பார்வையிலேயே காதல் என்கிற ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரமும், நீண்ட புரிதலுக்குப் பின்னர் காதல் என்கிற தபுவின் காதலும், இரண்டு காதல் கதைகளும் அழகாக காட்டப்பட்டன. இருவேறு பெண்களின் கண்ணோட்டத்தில் காதல் கதைகளை அணுகிய விதம் தனித்துவமாக இருந்தது.
படத்திற்கு உயிர்கொடுத்த ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள்
அஜித், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு என முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்தது இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். அவர்களின் மிகச் சிறந்த நடிப்பும், கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த விதமும் படத்தை மேலும் மெழுகேற்றியது. படத்தின் மிகப்பெரிய பலமாக ஏ.ஆர் ரகுமானின் இசை உள்ளது. “என்ன சொல்லப் போகிறாய்..”, “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்..”, “எங்கே எனது கவிதை..”, “கண்ணாமூச்சி ஏனடா..” ஆகிய பாடல்கள் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும், காலத்தால் அழியா வரம் பெற்ற பாடல்களாக உள்ளது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு மேலும் மெருகூட்டியது.
‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தின் சிறந்த ஒளிப்பதிவு
பொருளாதார நெருக்கடிகள், சமூக எதிர்பார்ப்புகள், இலக்கியம் என பல தலைப்புகளை அதீத உபதேசம் இன்றி நுட்பமாக இத்திரைப்படம் ரசிகர்களுக்கு எடுத்துரைத்தது. பாரம்பரியம் எவ்வாறு நவீன உலகத்துடன் இணைந்து வாழ முடியும் என்பதையும், அதேசமயம் பாரம்பரியத்தை நிராகரிக்காமலும் வாழ்வது எப்படி? என்பதையும் அழகாக எடுத்துக் காட்டியது. பி.சி ஸ்ரீராம் அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு பிரம்மாண்ட தோற்றத்தைக் கொடுத்தது. தஞ்சாவூர் அரண்மனை, சென்னை நகரக் காட்சிகள் என ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பாக படமாக்கப்பட்டது.
விரைவில் ரீ ரிலீஸ் ஆகும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’
முற்போக்கு சிந்தனைகளுடன் கூடிய இந்த திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்றாலும், எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. ஆனால் முதலுக்கு மோசம் இல்லை என்கிற வகையில் வசூலைப் பெற்றது. தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் படம் மேம்படுத்தப்பட்டு விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ் தாணு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உறுதி செய்துள்ளார். விரைவில் படத்தில் ரீ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.