நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் பணியாற்றிய பிரபலம் மாரடைப்பால் திடீர் மரணம்... சோகத்தில் படக்குழு
தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ள சுனில் பாபுவின் திடீர் மரணம் படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வாரிசு படத்தில் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ள சுனில் பாபுவின் திடீர் மரணம் படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
திரைத்துறையில் கலை இயக்குனராகவும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்தவர் சுனில் பாபு. 50 வயதாகும் இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுனில் பாபு, நேற்று நள்ளிரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட வாரிசு ரிலீஸ் தேதி! துணிவு படத்தின் வசூலுக்கு வேட்டு வைக்க விஜய் போட்ட பலே திட்டம்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளியை சேர்ந்த சுனில் பாபு, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் பணியாற்றி உள்ளார். மைசூருவில் கல்லூரிப் படிப்பை முடித்த இவர் பிரபல கலை இயக்குனர் சாபு சிரிலின் உதவியாளராக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார் சுனில் பாபு.
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ஆனந்தபத்ரம் படத்திற்காக சிறந்த கலை இயக்குனருக்கான கேரள அரசின் விருதையும் சுனில் பாபு வென்றுள்ளார். இவருக்கு பிரேமா என்கிற மனைவியும் ஆர்ய சரஸ்வதி என்கிற மகளும் உள்ளனர். சுனில் பாபு கடைசியாக பணியாற்றிய படம் விஜய்யின் வாரிசு. அப்படம் ரிலீசாகும் முன்னரே அவர் மரணமடைந்திருப்பது படக்குழுவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... இது எங்க டயலாக் மாமே... காப்பி சர்ச்சையில் சிக்கிய வாரிசு டிரைலர் - விஜய்யை வெளுத்து வாங்கும் ரஜினி ரசிகர்கள்