முதல் நாளே தலைவன் தலைவி படத்துக்கு கிடைத்த அடிதூள் கலெக்ஷன்; ஆத்தாடி இத்தனை கோடியா?
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த தலைவன் தலைவி திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆன நிலையில், அதன் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Thalaivan Thalaivii Day 1 Box Office Collection
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் இரண்டாவது படம் தலைவன் தலைவி. இதற்கு முன்னதாக அவர் நடிப்பில் கடந்த மே மாதம் ஏஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் பெரியளவில் சோபிக்காததால் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த விஜய் சேதுபதி, நேற்று தன்னுடைய தலைவன் தலைவி படத்தை ரிலீஸ் செய்தார். இப்படத்தின் வெற்றியை அவர் மலைபோல் நம்பி இருந்தார். இப்படம் உலகமெங்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. பாண்டிராஜ் இயக்கிய தலைவன் தலைவி திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார்.
தலைவன் தலைவி ரெஸ்பான்ஸ் எப்படி?
தலைவன் தலைவி திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் மைனா நந்தினி, தீபா, ஆர்.கே.சுரேஷ், விவேக் பிரசன்னா என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன தலைவன் தலைவி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஒரு அழகான படமாக தலைவன் தலைவி இருப்பதாக அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
தலைவன் தலைவி படத்தின் வசூல்
தலைவன் தலைவி படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து உள்ளது. அதன்படி ரிலீஸ் ஆன முதல் நாளில் இந்திய அளவில் ரூ.4.15 கோடியை வசூலித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3 கோடி வசூலித்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஏஸ் திரைப்படம் முதல் நாளில் 1 கோடி கூட வசூலிக்கவில்லை. அதைக்காட்டிலும் தலைவன் தலைவி படம் வசூலில் தூள் கிளப்பி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த மாதத்தில் ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் முதல் நாள் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையையும் தலைவன் தலைவி படைத்துள்ளது.
தலைவன் தலைவி உலகளாவிய வசூல்
தலைவன் தலைவி திரைப்படத்திற்கு வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் ஓவர்சீஸிலும் இப்படம் முதல் நாளில் ரூ.2 முதல் 3 கோடி வரை வசூலித்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இப்படம் உலகளவில் முதல் நாளில் 6.5 முதல் 7 கோடி வரை வசூலித்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் தலைவன் தலைவி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூல் அள்ளியதை போல் இந்த ஆண்டு தலைவன் தலைவி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் செஞ்சுரி அடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.