உதயநிதி படம்னா அரசு நிறுவனத்தில் புரமோட் செய்வீங்களா? எதிர்ப்புகள் வலுத்ததால் துணிவு டுவிட்டை நீக்கிய TANGEDCO
எதிர்ப்புகள் வலுத்ததால், தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான TANGEDCO-வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து துணிவு டுவிட் நீக்கப்பட்டு உள்ளது.
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ரிலீஸ் நெருங்கி வருவதால் துணிவு படத்தின் புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான TANGEDCO என்கிற அரசு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில், துணிவு படத்தின் போஸ்டருடன் கூடிய டுவிட் ஒன்று போடப்பட்டது. அதில், “மழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு தடையின்றி சீரான மின்சாரம் வழங்கிட தன் உயிரை பணயம் வைத்து பாடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையும் படியுங்கள்... ரியல் ஹீரோ என நிரூபித்த சூர்யா... ரசிகர்களின் மேற்படிப்பு மற்றும் வேலை கிடைக்க உதவுவதாக வாக்குறுதி
இந்த டுவிட் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் இப்படத்தை தற்போது தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதியின் சொந்த நிறுவனம் வெளியிடுவதால், அதனை புரமோட் செய்வதற்காகவே இவ்வாறு டுவிட் போடப்பட்டு உள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. உதயநிதி படம்னா அரசு நிறுவனத்தில் புரமோட் செய்வீர்களா? என்று நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், எதிர்ப்புகள் வலுத்ததால், தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான TANGEDCO-வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த துணிவு டுவிட் நீக்கப்பட்டு உள்ளது. TANGEDCO நிறுவனம் மக்களிடையே மின்சாரத்துறை பற்றிய அறிவிப்புகள் எளிதில் சென்று சேரும் விதமாக பட காட்சிகளை வைத்து மீம்ஸ்களும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... இரட்டை குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு... கியூட்டாக கிறிஸ்துமஸை கொண்டாடிய விக்கி - நயன் ஜோடி