250 கல்யாணங்களை நிறுத்தி இருக்கிறோம்... நடிகர் சூர்யா வெளியிட்ட ஷாக்கிங் ரிப்போர்ட்
அகரம் அறக்கட்டளையை வெற்றிகரமாக நடத்தி வரும் நடிகர் சூர்யா, இதுவரை 250 திருமணங்களை நிறுத்தி இருப்பதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

Suriya Stopped 250 Child Marriages
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்வில் சமூக சேவைகள் செய்வதிலும் தான் ஒரு ஹீரோ தான் என்பதை நிரூபித்து வருகிறார் சூர்யா. இவர் கடந்த 2006-ம் ஆண்டு அகரம் என்கிற அறக்கட்டளையை தொடங்கி, அதன் மூலம் படிக்க வசதியில்லாத ஏழை எளிய மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். அவரின் இந்த முயற்சி ஏராளமான கார்பரேட் நிறுவனங்களும் நிதியுதவி அளித்து வருகின்றன. இதனால் கடந்த 15 ஆண்டுகளில் 6 ஆயிரத்திற்கும் மேலான பட்டதாரிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் சூர்யா. அகரம் மூலம் பயின்று டாக்டரான மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 50க்கும் மேல் இருக்கிறது.
அகரம் சூர்யா
அகரம் அறக்கட்டளை செய்து வரும் இந்த உதவியால் ஏராளமானோரின் வாழ்வாதாரமும் உயர்ந்து இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் சூர்யாவை வைத்து கோபிநாத் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது அகரம் மூலம் படித்து வரும் மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் கலந்துகொண்டனர். அப்போது நந்தக்குமார் என்பவர் தனக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பது ஆசை என கூறி இருந்தார். அவர் ஆசைப்பட்டபடியே அவரின் கனவை நனவாக்கி இருக்கிறது அகரம். தற்போது படித்து டாக்டராகி இருக்கிறார் நந்தக்குமார். அண்மையில் சூர்யாவை வைத்து கோபிநாத் நடத்திய நிகழ்ச்சியில் டாக்டராக வந்து கலந்துகொண்டார் நந்தக்குமார்.
250 திருமணங்களை நிறுத்திய சூர்யா
அதேபோல் அகரம் மூலம் படித்து பட்டம் பெற்று, இன்று நல்ல நிலையில் இருக்கும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு அகரம் தங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி இருக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக கூறினர். இந்த நிகழ்ச்சியில் அதிர்ச்சியூட்டும் தகவலையும் வெளியிட்டு இருந்தார் சூர்யா, அதன்படி இதுவரை 250 மாணவிகளின் கல்யாணத்தை நிறுத்தி இருப்பதாக கூறினார். படிக்க வைக்க முடியாததால், அவர்களுக்கு 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்துவைக்க முயன்றபோது அதை அகரம் டீம் தடுத்து நிறுத்தியதாக சூர்யா கூறி இருந்தார். போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று போராடி நிறுத்தினோம் என்றும் தெரிவித்தார்.
சூர்யா வெளியிட்ட ரிப்போர்ட்
அதுமட்டுமின்றி அகரம் பார்த்த 20 ஆயிரம் பேரில் அப்பா இல்லாதவர்களைவிட, அம்மா இல்லாமல் தவித்த குழந்தைகள் தான் அதிகம். அதேபோல் அப்பா இன்றி அம்மா மட்டும் தான் இருக்கிறார்கள் என்றால் அவர் எப்படியாவது படிக்க வைத்துவிடுகிறார். கிட்டத்தட்ட 700 குடும்பங்களில் குடிப்பழக்கத்தால் மட்டும் தந்தைகளை இழந்திருக்கிறார்கள். அந்த குடிப்பழக்கத்தால் பிள்ளைகளுடைய படிப்பும் எதிர்காலமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்கிற ஷாக்கிங் ரிப்போர்ட்டையும் வெளியிட்டு இருந்தார் சூர்யா. அவர்களையெல்லாம் படிக்க வைத்து வரும் சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.