கருப்பு டீசர் சும்மா நெருப்பா இருக்கே... பாக்ஸ் ஆபிஸ் வேட்டைக்கு ரெடியான சூர்யா
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் டீசரை யூடியூப்பில் ரிலீஸ் செய்துள்ளது படக்குழு.

Karuppu Movie Teaser
ரெட்ரோ படத்திற்கு பின் நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் கருப்பு. சூர்யாவின் 45-வது படமான இதில் ஹீரோயினாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி இருக்கிறார். இவர் இதற்கு முன்னர் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆவார். கருப்பு திரைப்படத்தில் சூர்யா உடன் சுவாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு, நட்டி நட்ராஜ், அனகா ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். அவர் இப்படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.
கருப்பு படக்குழு
கருப்பு திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஜிகே விஷ்ணு மேற்கொண்டுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தின் படத்தொகுப்பாளராக கலைவாணன் பணியாற்றி உள்ளார். அன்பறிவு மற்றும் விக்ரம் மோர் ஆகியோர் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார்கள். நடன இயக்குனர்களாக ஷோபி மற்றும் சாண்டி மாஸ்டர் பணியாற்றி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகின்றன.
கருப்பு படக்குழுவின் பர்த்டே ட்ரீட்
நடிகர் சூர்யா இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருவதால், அவரின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அடுத்தடுத்து அப்டேட்டுகளை கருப்பு படக்குழு வெளியிட்ட வண்ணம் உள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு சூர்யாவின் மாஸ் லுக் அடங்கிய பிரத்யேக போஸ்டரை வெளியிட்டது படக்குழு. அதில் வாயில் சுருட்டுடன் கருப்பு வேட்டி, சட்டையில் செம மாஸாக காட்சியளித்தார் சூர்யா. இந்த நிலையில் அடுத்த சர்ப்ரைஸாக கருப்பு படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
கருப்பு டீசர் ரிலீஸ்
கருப்பு டீசரில் சூர்யாவின் மாஸான ஆக்ஷன் காட்சிகள் நிரம்பி இருக்கிறது. இதில் சூர்யா சரவணன் என்கிற தன்னுடைய ஒரிஜினல் பெயருடனே நடித்துள்ளார். மேலும் தனக்கு இன்னொரு பெயர் இருப்பதாக அவர் கூறுகிறார். இதன்மூலம் அவர் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது. மேலும் சூர்யாவின் ஐகானிக் காட்சிகளையும் படத்தில் ரீகிரியேட் செய்திருக்கிறார்கள். குறிப்பாக அவர் கஜினி படத்தில் தண்ணிப்பழம் சாப்பிடும் காட்சியை இதிலும் வைத்து இருக்கிறார்கள். இந்த டீசர் முழுக்க சூர்யாவின் காட்சிகள் தான் இடம்பெற்றிருக்கின்றன. திரிஷாவை ஒரு இடத்தில் கூட காட்டவில்லை. இதனால் அவரது கேரக்டர் சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
On this special day of celebrating @Suriya_offl sir, we’re thrilled to present the powerful teaser of #Karuppu💥#KaruppuTeaserhttps://t.co/E6EwbngsWs#HappyBirthdaySuriya#கருப்பு#కరుప్పు#കറുപ്പ്#ಕರುಪ್ಪು
— Karuppu (@KaruppuMovie) July 23, 2025