சூர்யா தயாரித்துள்ள முதல் பாலிவுட் படம் தள்ளிப்போனது.. சூரரைப் போற்று இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி திடீரென மாற்றம்
சூர்யா தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கின் ரிலீஸ் தேதி திடீரென தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
soorarai pottru
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்த திரைப்படம் சூரரைப் போற்று. இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பொம்மி என்கிற கதாபாத்திரத்தில் அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.
மேலும் ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட், விவேக் பிரசன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இப்படத்திற்கு ஆறு தேசிய விருதுகளும் கிடைத்தன. சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜிவி பிரகாஷ், சுதா கொங்கரா ஆகியோர் இப்படத்திற்காக முதன்முறையாக தேசிய விருதை வென்று அசத்தினர்.
இதையும் படியுங்கள்... பெரும் தொகை கொடுத்து ஜவான் படத்தின் ரிலீஸ் உரிமையை தட்டிதூக்கிய ரெட் ஜெயண்ட்
தமிழில் மிகப்பெரிய வெற்றிபெற்ற இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்த நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் அப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவித்தார். சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராதிகா நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இதற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து உள்ளார்.
சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது அப்படத்தின் ரிலீஸ் அடுத்தாண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சூரரைப் போற்று இந்தி ரீமேக் வருகிற 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் ப்ரோமோ ஷூட்டிங்கை முடித்த கமல்! நிகழ்ச்சி துவங்குவதில் வந்த புது சிக்கல்? இதுக்கும் கமல் தான் காரணமா?