அதென்ன ‘கங்குவா’..? சூர்யா 42 படத்தின் வித்தியாசமான தலைப்புக்கு இப்படி ஒரு அர்த்தமா..!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு என்ன அர்த்தம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு கங்குவா என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நடிகர் சூர்யா நடிக்கும் வரலாற்று காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். புஷ்பா படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியதால், இப்படத்தின் ஆடியோ உரிமையை சரிகமா நிறுவனம் ரூ.10 கோடிக்கு மேல் வாங்கி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதுதவிர இப்படத்தின் இந்தி உரிமை மட்டும் ரூ.100 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. இப்படி ரிலீசுக்கு முன்பே கங்குவா திரைப்படம் கல்லாகட்டி வருகிறது.
இதையும் படியுங்கள்... உருகி உருகி காதலித்த இளையராஜாவுக்கு ‘நோ’ சொல்லிவிட்டு ஊரைவிட்டே ஓடிய காதலி... இசைஞானியின் ஒருதலைக் காதல்
இந்நிலையில், கங்குவா என்கிற டைட்டிலை படக்குழு இன்று அறிவித்ததை அடுத்து அதற்கான அர்த்தம் என்ன என்பதை தான் ரசிகர்கள் வலைவீசி தேடி வருகின்றனர். அதனை கூகுளில் தேடினால் கங்குவா என ஆந்திராவில் ஒரு கிராமம் இருப்பதாக காட்டுகிறது. ஆனால் உண்மையில் அதற்கான அர்த்தம் என்னவென்றால், ‘நெருப்பு ஆற்றல் கொண்ட மனிதன்’ என்று அர்த்தமாம். அந்த டைட்டிலின் கீழ் வலிமைமிக்க வீரனின் கதை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது ஒருபக்கம் இருக்க கங்குவா என்கிற பெயரில் ஏற்கனவே ரஜினி ஒரு இந்தி படத்தில் நடித்துள்ளதாகவும் அதை தான் தற்போது பட்டி டிங்கரிங் பார்த்து சூர்யா 42 படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள் எனவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்தியில் ரஜினி நடிப்பில் கடந்த 1984-ம் ஆண்டு ரிலீசான கங்குவா திரைப்படம் தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மலையூர் மம்பட்டியான் படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் செம்ம அடி வாங்கிய சமந்தாவின் சாகுந்தலம்... 2 நாளில் மொத்த கலெக்ஷனே இவ்வளவுதானா?