3 நாட்களில் பிறந்தநாள் கொண்டாட இருந்த RRR பட வில்லன் நடிகர் ரே ஸ்டீவன்சன் திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜவுலியின் RRR படத்தில் வில்லனாக நடித்த பிரிட்டிஷ் நடிகர் ரே ஸ்டீவன்சன் காலமானார். அவருக்கு வயது 58.
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான RRR படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தவர் பிரிட்டிஷ் நடிகர் ரே ஸ்டீவன்சன். அப்படத்தில் சர் ஸ்காட் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரே ஸ்டீவன்சன், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சர்வாதிகாரிகள் எப்படி இருந்தார்கள் என்பதை தன் நடிப்பால் கண்முன் கொண்டுவந்திருந்தார். அவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. உலக புகழ்பெற்ற நடிகரான இவர் RRR தவிர, மார்வெல் தொடரான தோர் படத்திலும் நடித்துள்ளார்.
பிரிட்டிஷ் நடிகர் ரே ஸ்டீவன்சன் 33 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1990 இல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். முதல் முறையாக அவர் ஐரோப்பிய தொலைக்காட்சி தொடரில் நடித்தார். 1998 ஆம் ஆண்டு வெளியான தி தியரி ஆஃப் ஃப்ளைட் என்கிற திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஹாலிவுட்டில் பல்வேறு வெற்றி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
ரே ஸ்டீவன்சனின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரையில், அவர் 1997ம் ஆண்டு ரூத் காமெல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணமான 8 ஆண்டுகளுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 2005-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... நெருங்கிய நண்பனை இழந்திருக்கிறேன்... ஈடுசெய்ய முடியாத இழப்பு - சரத்பாபு மறைவால் கலங்கிப்போன ரஜினிகாந்த்
இந்நிலையில், கேசினோ படத்தின் படப்பிடிப்பிற்காக இத்தாலி சென்றிருந்த நடிகர் ரே ஸ்டீவன்சன், அங்கு திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. நடிகர் ரே ஸ்டீவன்சனின் மறைவு ஆர்.ஆர்.ஆர் படக்குழுவை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 3 நாட்களில் நடிகர் ரே ஸ்டீவன்சன் தனது 59-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் இயக்குனர் ராஜமவுலி ரேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது : “இந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியாக உள்ளது. ரே மிகவும் ஆற்றல் மிக்கவராக செட்டில் இருப்பார். அவருடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடன் உள்ளன. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... தன்னை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்த நடிகர் சரத்பாபு.. யார் இந்த ரமா பிரபா?