நெருங்கிய நண்பனை இழந்திருக்கிறேன்... ஈடுசெய்ய முடியாத இழப்பு - சரத்பாபு மறைவால் கலங்கிப்போன ரஜினிகாந்த்
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த நடிகரும், தன்னுடைய நண்பனுமான சரத்பாபு மறைவுக்கு ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரத்பாபு. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சரத்பாபு, செப்சிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த அரியவகை நோய் பாதிப்பால் அவரது உடல் உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கின.
இதனால் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரத்பாபு மறைவால் தமிழ், தெலுங்கு திரையுலகினர் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சரத்பாபுவின் மறைவுக்கு அவரின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : ‘இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியும், சரத்பாபுவும் முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து, நெற்றிக்கண், வேலைக்காரன், பாபா போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.