அப்போ ரூ.12 கோடி... இப்போ ரூ.2000 கோடி - ராஜமவுலி பாக்ஸ் ஆபிஸின் ‘பாகுபலி’ ஆன கதை தெரியுமா?
இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ராஜமவுலி தான், அவரின் பிறந்தநாளான இன்று அவரது திரையுலக பயணம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்த ராஜமவுலி முதலில் தனது தந்தை விஜயேந்திர பிரசாத் உள்பட சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் சில தொலைக்காட்சி தொடர்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ராஜமவுலி, கடந்த 2001-ம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்த ஸ்டூடண்ட் நம்பர் 1 என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.12 கோடி வசூலை வாரிக்குவித்தது. அந்த சமயத்தில் இது பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.
இதையடுத்து 2003-ம் ஆண்டு மீண்டும் ஜூனியர் என்.டி.ஆர் உடன் கூட்டணி அமைத்த ராஜமவுலி, அவரை வைத்து சிம்ஹாத்ரி என்கிற படத்தை இயக்கினார். இந்தப் படமும் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததோடு மட்டுமின்றி அந்த சமயத்தில் தெலுங்கில் அதிக கலெக்ஷன் அள்ளிய படமாகவும் இருந்து சாதனை படைத்தது. இதையடுத்து 2004-ம் ஆண்டு ரக்பி விளையாட்டை மையமாக வைத்து சை என்கிற படத்தை இயக்கினார்.
பின்னர் 2005-ம் ஆண்டு பிரபாஸ் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்த ராஜமவுலி சத்ரபதி என்கிற பிரம்மாண்ட படத்தை இயக்கினார். அந்த சமயத்தில் ரூ.10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.21 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. பின்னர் 2006-ம் ஆண்டு ரவிதேஜா நடித்த விக்ரமர்குடு, 2007-ம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் நடித்த யமடொங்கா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து சக்சஸ்புல் இயக்குனராக வலம் வந்த ராஜமவுலி இதையடுத்து இயக்கிய மகதீரா திரைப்படம் தான் அவரை பான் இந்தியா இயக்குனராக்கியது.
ராம்சரண் நடிப்பில் வெளிவந்த இப்படம் 44 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படம் ரிலீசாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்திற்காக ராஜமவுலிக்கு தேசிய விருதும் கிடைத்தது. பின்னர் 2010 மரயடா ராமாயணா என்கிற காமெடி படத்தை இயக்கினார்.
இதையடுத்து உலகையே பிரம்மிப்பில் ஆழ்த்திய ராஜமவுலியின் படைப்பு என்றால் அது நான் ஈ தான். ஒரு ஈ யை வைத்து ஒரு படத்தை எடுக்க முடியும் என நிரூபித்து காட்டி அதன் மூலம் வெற்றி வாகையும் சூடி இருந்தர் ராஜமவுலி. இப்படத்தில் நானி ஹீரோவாகவும், சுதீப் வில்லனாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... ஜிபி முத்து கேட்ட ஒரே ஒரு கேள்வியால் வாயடைத்துப் போன கமல்ஹாசன் - தீயாய் பரவும் வீடியோ இதோ
இதன்பின்னர் 3 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னர் ராஜமவுலி இயக்கிய பிரம்மாண்ட படம் தான் பாகுபலி. 2015-ம் ஆண்டு ரிலீசான இப்படத்தின் முதல் பாகம் இந்தியா முழுவதிலும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியதோடு வசூலிலும் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்தது. பின்னர் 2017-ல் வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம் வசூல் மழை பொழிந்தது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.2000 கோடிக்கு மேல் வசூலித்து அதிகம் வசூலித்த இந்திய திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது.
பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஆர்.ஆர்.ஆர். என்கிற சரித்திர படத்தை இயக்கினார் ராஜமவுலி. இந்த அண்டு ரிலீசான இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் விருது விழாவில் 12 பிரிவுகளிலும் நாமினேட் ஆகி உள்ளது. இதில் ஏதேனும் ஒரு பிரிவில் வென்று ஆர்.ஆர்.ஆர் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் ராஜமவுலி இதுவரை 12 படங்களை மட்டுமே இயக்கி உள்ளார் என்பது பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் அந்த 12 படங்களுமே காலம் கடந்து பேசப்படும் வகையில் அவர் கொடுத்துள்ளார். இவ்வாறு சக்சஸ்புல் இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.
இதையும் படியுங்கள்... சினிமாவில் நடிக்க மறுத்ததேன்..மனம் திறந்த பிக்பாஸ் 6 ரக்ஷிதா மகாலட்சுமி