ஹெல்மெட் போட்டு வந்தா பெட்ரோல் இலவசம்... நடிகர் விஜய்யால் கிடைத்த அதிரடி ஆஃபர் - அலைமோதிய கூட்டம்
vijay : விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க தொண்டர் அணி சார்பாக ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது 48-வது பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அவருக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் வாரிசு படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றன.
அதேபோல் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த வாரம் முழுக்க நலத்திட்ட உதவிகளை வழங்க நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவசமாக பெட்ரோல் வழங்கி உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆச்சாள்புரத்தில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க தொண்டர் அணி சார்பாக ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது.
முதலாவதாக வந்த 100 பேருக்கு மட்டுமே இந்த இலவச பெட்ரோல் வழங்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடப்பட்டது. இந்த செய்தி அறிந்து ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வந்திருந்தவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் இனிப்புகளையும் வழங்கினர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... கன்னியின் காதலி முதல் மூன்றாம் பிறை வரை... காலம் கடந்து பேசப்படும் கவியரசு கண்ணதாசனின் பாடல்கள்