கன்னியின் காதலி முதல் மூன்றாம் பிறை வரை... காலம் கடந்து பேசப்படும் கவியரசு கண்ணதாசனின் பாடல்கள்
Kannadasan Birthday : எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்கிற பாடல் வரிகளுக்கு ஏற்ப காலம் கடந்து நிலைத்திருக்கும் கவியரசு கண்ணதாசனை பற்றிய சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
ஒருவர் மறைந்த பின்னரும் நீங்கா புகழுடன் அவரது பெயர் நிலைத்து நிற்பது ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியம். அந்த வகையில் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த பல பாடல்களை இயற்றி, மக்கள் மனதில் என்றுமே கவியரசனாக வாழ்பவர் கண்ணதாசன். 1927-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ந் தேதி காரைக்குடியின் சிறுகூடல் பட்டியில் பிறந்தார் கவியரசு கண்ணதாசன். இவரது தந்தை சாத்தப்பன், தாய் விசாலாட்சி. கண்ணதாசன் உடன் பிறந்தோர் 8 பேர், 8-ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும் சிறுவயது முதலே எழுத்தின் மீது தனியாத ஆர்வம் கொண்டிருந்தார் கண்ணதாசன்.
பத்திரிகையில் கதை எழுத வேண்டும் என்ற கனவோடு யாரிடமும் சொல்லாமல், சென்னை வந்த கண்ணதாசனின் கனவு, பல போராட்டங்களுக்கு பிறகு நனவாகி, பின் அதுவே திரைப்படங்களுக்கு பாடல் எழுத வித்திட்டது. அந்த வகையில் அவர் எழுதிய முதல் பாடல் கன்னியின் காதலி என்கிற படத்தில் இடம்பெற்ற கலங்காதிரு மனமே என்ற பாடல் தான்.
அதன்பின் திரையிசை பாடல்கள் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் கண்ணதாசன். அவருடைய பாடல்கள் இல்லாத படங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு, அவரது கவிதைகள் கோலோச்சியது. திரையுலக ஜாம்பவான்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர்களின் வளர்ச்சியில் கண்ணதாசனின் பாடல்கள் பெரும் பங்காற்றி உள்ளன.
கமல், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே என்கிற பாடல்தான் கண்ணதாசனின் கடைசி பாடலாக அமைந்தது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் கண்ணதாசன் எழுதியுள்ளார். நான் நிரந்தரமானவன், அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்கிற பாடல் வரிகளுக்கு ஏற்ப காலம் கடந்து நிலைத்திருக்கும் கவியரசு கண்ணதாசனை அவரது பிறந்தநாளில் நினைவு கூறுவதில் பெருமை கொள்கிறோம்.
இதையும் படியுங்கள்... ஒரே தினத்தில் பிறந்து திரையிசையில் பல மாயாஜாலங்களை செய்த எம்.எஸ்.வி - கண்ணதாசன் கூட்டணியை மறக்க முடியுமா...!