ஒரே தினத்தில் பிறந்து திரையிசையில் பல மாயாஜாலங்களை செய்த எம்.எஸ்.வி - கண்ணதாசன் கூட்டணியை மறக்க முடியுமா...!
MSV - Kannadasan Birthday : ஒரே பிறந்த தேதியை கொண்ட கண்ணதாசன் உடன் எம்.எஸ்.வி கொண்ட நட்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது, அதனைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
ஜூன் 24, தமிழ் திரை இசையின் ஜாம்பவான்களாக இன்றும் கொண்டாடப்படும் கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனனின் பிறந்ததினம் இன்று. கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என்று நம்பிக்கை விதை விதைத்து தன் பயணத்தை தொடங்கிய கண்ணதாசன், எம்.எஸ்.வி-யோடு இணைந்து பல பாடல்களை இயற்றினார்.
இருவருக்கும் இடையே இருந்த அலாதியான நட்பே, திரையிசையில் பல அழகிய ஜாலங்களை கொண்டு வந்து சேர்த்தது. இளமை ததும்பும் காதல் பாடல்களாக இருக்கட்டும், இதயம் உருகும் சோக பாடல்களாக இருக்கட்டும், தன்னிலை உணர்த்தும் தத்துவ பாடல்கள் ஆகட்டும், எல்லா வகையிலும் இவர்களது பாடல்களுக்கு என்று தனி மவுசு உண்டு.
கேரளாவில் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில் 1928-ம் ஆண்டு பிறந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். 4 வயதிலேயே தனது தந்தையை இழந்த அவர், கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருஷ்ணன் வீட்டில் வளர்ந்தார்.
சிறுவயது முதலே திரைப்பட பாடல்கள் மீது அளவற்ற காதல் கொண்டிருந்த எம்.எஸ்.விஸ்வநாதன், தியேட்டர்களில் நொறுக்குத்தீனி விற்கும் இடைவேளையில், இசை மீதான தனது ஆர்வத்தையும், ஆளுமையையும் வளர்த்துக் கொண்டார். அதன்பின்னர் திரையுலகில் அறிமுகமாகி சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற சிகரங்களுக்கு இணையாக இசையில் ஜொலித்தார் எம்.எஸ்.வி. நீராருங் கடலுடுத்த எனும் தமிழ் தாய் வாழ்த்துக்கு இசையமைத்தவரும் எம்.எஸ்.விஸ்வநாதன் தான்.
எம்.எஸ்.வியை போலவே கவியரசு கண்ணதாசனும் இதே நாளில் 1927-ம் ஆண்டு காரைக்குடியின் சிறுகூடல் பட்டியில் பிறந்தார். எம்.எஸ்.வியின் மெட்டுக்கு கவியரசு கண்ணதாசன் வரியமைத்த அத்தனை பாடல்களும் காலத்தை கடந்து நிற்பவை ஆகும். இவர்கள் கூட்டணியில் வாழ்க்கையின் அத்தனை உணர்வுகளுக்கும் பாடல்கள் படைக்கப்பட்டன.
கேட்பவர்களெல்லாம் பாடிய அந்த பாடல்களால் சராசரி ரசிகனுக்கும், திரையிசைக்கும் இருந்த இடைவெளி அடைக்கப்பட்டன. தத்துவ பாடல்களால் கடைக்கோடி ரசிகர்களின் நெஞ்சங்களை ஆட்சி செய்தது இந்த கூட்டணி. ஒரே பிறந்த தேதியை கொண்ட கண்ணதாசன் உடன் எம்.எஸ்.வி கொண்ட நட்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
இதையும் படியுங்கள்... Nayanthara : திருமணத்தை நடத்தி வச்ச புரோகிதர்களுக்கு விக்கி - நயன் கொடுத்த சம்பளம்... அடேங்கப்பா இவ்வளவா?