மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு... வடிவேலுவுக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்து ஏமாற்றிய கும்பல் - ஷாக்கிங் தகவல்
சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் சார்பில் வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் போலியானது என்கிற பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
நகைச்சுவை வேடம் என்றாலே வடிவேலு தான் என சொல்லும் அளவுக்கு தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்துகொண்டிருந்தவர் வடிவேலு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரது காமெடிக்கு சிரிக்காத ஆளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு தனது நகைச்சுவையால் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆகிவிட்டார் வடிவேலு. இப்படி சினிமாவில் டாப் கியரில் சென்று கொண்டிருந்த வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க தடை விதித்து ரெட் கார்டு போடப்பட்டது.
இதன் காரணமாக அவர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். வடிவேலு நடிக்க ரெட் கார்டு போட்டாலும், அவரது காமெடி காட்சிகள் மீம்ஸ் மூலம் மக்களை தினசரி மகிழ்வித்து வந்தன. இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு வடிவேலு படங்களில் நடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு அவர் மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் தொடர்ந்து குவியத் தொடங்கிவிட்டன.
ரீ-எண்ட்ரியில் அவர் முதன்முதலில் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. இதையடுத்து அவர் நடிப்பில் தற்போது பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2, மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் போன்ற திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதுதவிர மேலும் சில படங்களில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு ரீ-எண்ட்ரியில் படு ஜோராக கலக்கிக் கொண்டிருக்கிறார் வடிவேலு.
இதையும் படியுங்கள்... இந்தியன் 2 படம் குறித்து டக்கரான அப்டேட் கொடுத்த உலக நாயகன்! எகிறிய எதிர்பார்ப்பு!
இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அப்போது வடிவேலு டாக்டர் பட்டத்துடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வந்தன. இந்நிலையில், வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட அந்த டாக்டர் பட்டம் போலியானது என்கிற பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த டாக்டர் பட்டம் வழங்கும் விழா அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதால், அண்ணா பல்கலைக்கழகம் தான் தங்களுக்கு விருது வழங்குவதாக அனைவரும் நம்பி அந்த விழாவில் கலந்துகொண்டனர். இதில் வடிவேலு மட்டுமின்றி தேவா, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர், நடன இயக்குனர் சாண்டி உள்பட ஏராளமான பிரபலங்களுக்கு அந்த போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்த பட்டத்தை வழங்கினார்.
தற்போது சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்கிற அமைப்பே இல்லை என்கிற அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், வடிவேலுவுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை நாங்கள் வழங்கவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகத்தையும், அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றியுள்ள அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... மில்லியன் நன்றிகள் போதாது! பிரபலத்துடன் இருக்கும் 'லியோ' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!