ஓடிடியில் யார் டாப்பு? அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
ஓடிடி தளங்களில் வார வாரம் புதுப்படங்கள் வரிசைகட்டி வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை பார்க்கலாம்.

Top 5 Most Watched Films and Web Series on OTT
ஓடிடி தளங்களின் வளர்ச்சியால் அதில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜீ5, ஜியோ ஹாட்ஸ்டார், ஆஹா, சோனி லிவ் என எக்கச்சக்கமான ஓடிடி தளங்கள் உள்ளன. அதில் வார வாரம் புதுப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் அக்டோபர் 20 முதல் 26-ந் தேதி வரை ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் டாப் 5 பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டு உள்ளது. அதில் என்னென்ன படங்கள் மற்றும் வெப் தொடர்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.
டாப் 5 படங்கள்
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள் பட்டியலில் முதலிடத்தை பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் பிடித்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படத்திற்கு 35 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் கிரேட்டர் கலேஷ் என்கிற இந்திப்படம் உள்ளது. இப்படத்தை ஆதித்யா சந்தோக் இயக்கி இருக்கிறார். நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படத்திற்கு 20 லட்சம் வியூஸ் கிடைத்திருக்கிறது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை ஜான்வி கபூர் நடித்த பரம சுந்தரி திரைப்படம் பிடித்துள்ளது. அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த படத்திற்கு 19 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளதாம்.
அதிக வியூஸ் அள்ளிய சக்தித் திருமகன்
விஜய் ஆண்டனி நடித்த சக்தித் திருமகன் திரைப்படத்திற்கு ஓடிடியில் அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அப்படம் இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. அருண் பிரபு இயக்கியுள்ள சக்தித் திருமகன் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் 17 லட்சம் வியூஸ் அள்ளி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ஐந்தாம் இடத்தில் ஹிருத்திக் ரோஷனின் வார் 2 திரைப்படம் உள்ளது. அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவான இந்த ஸ்பை த்ரில்லர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படத்திற்கு 15 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது.
டாப் 5 வெப் சீரிஸ்
அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 வெப் தொடர்களின் பட்டியலில் மிர்ச்சி செந்தில், ஷபானா மற்றும் சுஜிதா நடிப்பில் உருவான போலீஸ் போலீஸ் என்கிற தமிழ் வெப் சீரிஸ் ஐந்தாம் இடத்தில் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிவரும் இந்த வெப் தொடர் 11 லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது. இதையடுத்து ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ள சேர்ச் என்கிற வெப் தொடர் 12 லட்சம் வியூஸ் உடன் 4ம் இடத்திலும், அமேசான் பிரைமில் உள்ள ஜம்னாபார் சீசன் 2 வெப் தொடர் 13 லட்சம் வியூஸ் உடன் மூன்றாவது இடத்திலும், மகாபாரத் ஏக் தர்மயுத்தம் என்கிற ஏஐ வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் 14 லட்சம் வியூஸ் உடன் 2வது இடத்திலும், நெட்பிளிக்ஸின் குருக்ஷேத்ரா 20 லட்சம் வியூஸ் உடன் முதலிடத்திலும் உள்ளது.