- Home
- Cinema
- ஓடிடி ரிலீசுக்கு ரெடியான ‘காந்தாரா சாப்டர் 1’ படம் ஒட்டுமொத்தமாக வாரிசுருட்டிய வசூல் எவ்வளவு தெரியுமா?
ஓடிடி ரிலீசுக்கு ரெடியான ‘காந்தாரா சாப்டர் 1’ படம் ஒட்டுமொத்தமாக வாரிசுருட்டிய வசூல் எவ்வளவு தெரியுமா?
ரிஷப் ஷெட்டி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் பிரைம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

Kantara Chapter 1 OTT Release Date
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு, ரிஷப் ஷெட்டி நடித்த 'காந்தாரா: சாப்டர் 1' ஓடிடியில் வெளியாகத் தயாராக உள்ளது. 'காந்தாரா: சாப்டர் 1' துளுநாட்டில் உள்ள தெய்வ வழிபாட்டினை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கிறது. காந்தாரா காடு மற்றும் அதன் பழங்குடி சமூகங்களின் பாதுகாவலரான பெர்மே என்கிற கதாபாத்திரத்தில் ரிஷப் ஷெட்டி நடித்திருக்கிறார். இப்படத்தில் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவையா மற்றும் ஜெயராம் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
காந்தாரா சாப்டர் 1 பாக்ஸ் ஆபிஸ்
தெய்வங்களிடமிருந்து கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முயற்சிக்கும் ஒரு அரச குடும்பத்திற்கும், அவர்களின் ஆட்சியை எதிர்க்கும் பழங்குடியினருக்கும் இடையிலான போராட்டம் தான் இந்த காந்தாரா சாப்டர் 1 படத்தின் கதைச் சுருக்கம். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வெளியான முதல் நாளில் இருந்தே அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை ஆடியது. இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்த காந்தாரா சாப்டர் 1, தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படம் இதுவரை 820 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.
காந்தாரா சாப்டர் 1 ஓடிடி ரிலீஸ் தேதி
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சுமார் 125 கோடி தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாக்கிய இந்தத் திரைப்படம் தற்போது ஓடிடி ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 31-ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இப்படத்தின் இந்தி பதிப்பு மட்டும் ஓடிடியில் தாமதமாக வெளியாக இருக்கிறது. வருகிற அக்டோபர் 31ந் தேதி காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் ஆங்கில வெர்ஷன் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் ஷெட்டி நெகிழ்ச்சி
ஓடிடி வெளியீடு குறித்து ரிஷப் ஷெட்டி கூறியதாவது, "இந்த ப்ரீக்வெலில் நான் வேலை செய்யத் தொடங்கியபோது, இந்த உலகின் தோற்றத்திற்குத் திரும்ப விரும்பினேன் - எல்லாவற்றிற்கும் உத்வேகம் அளித்த நம் பூர்வீகத்திற்கு நன்றி. படத்தில் உள்ள ஒவ்வொரு சடங்கு, உணர்ச்சி மற்றும் கலாச்சாரம் ஆகியவை உண்மையான மரபுகளிலிருந்து எடுக்கப்பட்டது. திரையரங்குகளில் கிடைத்த அன்பு, நமது நாட்டுப்புறக் கதைகள் பார்வையாளர்களுடன் எவ்வளவு ஆழமாக எதிரொலிக்கிறது என்பதன் பிரதிபலிப்பாகும். பிரைம் வீடியோ இந்தக் கதையை எல்லைகள் கடந்து எடுத்துச் செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் காந்தாராவின் உலகின் ஆன்மா, மர்மம் மற்றும் தெய்வீகத்தை அதன் தூய்மையான வடிவத்தில் அனுபவிக்க அனுமதிக்கும்" என்றார்.