தொடரும் வசூல் வேட்டை... நான்கு நாட்களில் ரூ.400 கோடி கலெக்ஷன் அள்ளிய ஷாருக்கானின் பதான்
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகி இருக்கும் பதான் திரைப்படம் நான்கே நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த ஜீரோ திரைப்படம் படுதோல்வியை சந்தித்ததன் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இருப்பினும் இடையிடையே ராக்கெட்ரி, பிரம்மாஸ்திரா போன்ற படங்களில் கேமியோ ரோலில் நடித்து ஆறுதல் அளித்து வந்தார் ஷாருக்கான்.
இந்நிலையில், ஷாருக்கான் நடிப்பில் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் ரிலீசாகி உள்ள திரைப்படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இப்படம் ரிலீசுக்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. நடிகை தீபிகா படுகோனே பாடல் காட்சி ஒன்றில் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்திருந்ததன் காரணமாக இப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் போர்க்கொடு தூக்கினர்.
இதையும் படியுங்கள்... புற்றுநோய் பாதிப்பால் தாய் மரணம்... கதறி அழுத பிக்பாஸ் பிரபலம் - ஆறுதல் கூறும் ரசிகர்கள்
இப்படம் ரிலீஸான கடந்த ஜனவரி 25-ந் தேதி கூட நாடு முழுவதும் இந்து அமைப்பினர் சார்பில் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. சில மாநிலங்களில் தியேட்டரின் முன் ஒட்டப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. இதையெல்லாம் மீறி படம் ரசிகர்களை கவரும் வகையில் இருந்ததால் முதல் நாளில் இருந்தே பதான் திரைப்படம் வசூல் வேட்டையாடி வருகிறது.
முதல் நாளில் ரூ.106 கோடி கலெக்ஷன் அள்ளிய இப்படம் அடுத்தடுத்த நாட்களிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், தற்போது நான்கு நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை அள்ளி பதான் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் அதிவேகமாக ரூ.400 கோடி கலெக்ஷன் அள்ளிய பாலிவுட் படம் என்கிற சாதனையை படைத்துள்ளது பதான். இன்றும் விடுமுறை நாள் என்பதால் நாளை இப்படம் ரூ.500 கோடி கலெக்ஷனை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இப்படி ஏமாத்திட்டீங்களே அஜித்... விக்னேஷ் சிவனுக்காக நீதி கேட்கும் நெட்டிசன்ஸ் - டிரெண்டாகும் ஹேஷ்டேக்